நெல் உற்பத்தியில் இந்தியா இரண்டாவது இடம்-கார்வேந்தன் தகவல்

செவ்வாய், 25 டிசம்பர் 2007 (11:07 IST)
இந்தியா நெல் உற்பத்தியில் இரண்டாவது இடம் வகிக்கிறது என அரிசி ஆலை எந்திரக் கண்காட்சியில் பாராளுமன்ற உறுப்பினர் கார்வேந்தன் தெரிவித்தார்.

ஈரோடு சென்னிமலை ரோட்டில் உள்ள மகாராஜா கலையரங்கில் அரிசி ஆலை எந்திரக் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடந்தது. கண்காட்சியை கைத்தறி துறை அமைச்சர் என்.கே.கே.பி.ராஜா துவக்கி வைத்து பேசினார். பாராளுமன்ற உறுப்பினர் கார்வேந்தன் பேசியதாவது, இந்தியாவில் 73 சதவீதம் பேர் விவசாயம் மற்றும் அதைத் சார்ந்த தொழில் செய்து வருகின்றனர்.

இதில் 70 சதவீதம் பேர் கோதுமை, நெல் பயிரிடுகின்றனர். 1960ம் ஆண்டில் உலக நெல் உற்பத்தி 200 மில்லியன் மெட்ரிக் டன், 2004ம் ஆண்டு 600 மில்லியன் மெட்ரிக் டன், 2005ல் 700 மில்லியன் மெட்ரிக் டன்னாக உள்ளது.

உலகத்திலேயே சீனாவில் 182 மில்லியம் மெட்ரிக் டன் நெல் உற்பத்தியாகிறது. 137 மில்லியன் மெட்ரிக் டன் நெல் உற்பத்தி செய்யும் இந்தியா உலகில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

அரிசி ஆலை நிர்வாகிகளுக்கு ரூ. 10 லட்சம் வரை மானியம் வழங்க கருத்தரங்கில் வைக்கப்பட்ட கோரிக்கை பரிந்துரை செய்யப்படும் எ‌ன்று அவர் பேசினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்