அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் - ஐ.ஆர்.ஆர்.ஐ. எச்சரிக்கை
வெள்ளி, 14 டிசம்பர் 2007 (20:02 IST)
அரிசி உற்பத்தியை அதிகரிக்காவிட்டால், உலகளவில் அரிசிக்கு தட்டுப்பாடு உருவாகும் என்று சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனம் எச்சரித்துள்ளது.
அதிகரித்துவரும் மக்கள்தொகையாலும், பொருளாதார வளர்ச்சியினாலும் ஏற்கனவே உற்பத்தியைவிட அரிசி பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால் 1970ம் ஆண்டுகளில் இருந்தே அரிசி இருப்பு குறைந்துவருகிறது. தற்போது உலகளவில் 600 கோடிக்கும் அதிகமான மக்கள் அரிசியை உட்கொள்ளும் நிலையில வரும் 2030ம் ஆண்டில் அரிசிக்கான தேவை 50 சதவீதம் அதிகரிக்கும். சராசரி அரிசி விலை கடந்த 6 ஆண்டுகளில் இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது. எரிபொருளுக்கான தேவையால் வளங்கள் உறிஞ்சப்படுகின்றன. தட்பவெப்ப மாற்றங்களும் அரிசி உற்பத்திக்கு தடையாக உள்ளது.
இதற்காக அதிக சக்தியுள்ள சி4 அரிசி உற்பத்தியை ஊக்கவித்து, 50 சதவீதம் உற்பத்தியை அதிகரிக்க முயற்சிக்க இருப்பதாக சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனஇயக்குனர் ராபர்ட் ஜீய்க்ளர் கூறியுள்ளார்.
எனினும் இதற்கான சாத்தியக்கூறுகளை கண்டறிந்து அறிதியிட்டு கூற 3 ஆண்டுகள் ஆகும். உற்பத்தியை பெருக்க மேலும் 7 ஆண்டுகள் ஆகும் என்று ராபர்ட் கூறியுள்ளார்.
அதுவரை நிலம், உணவுப்பொருட்களின் தரம் கெடாதவாறு இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்தி உணவுப்பொருட்களுக்கான பற்றாக்குறையை விவசாயிகள் நிவர்த்தி செய்ய வேண்டும். அரசாங்கமும் விவசாயத்திற்கு போதுமான நிதி உதவி அளிக்க வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.