பாகிஸ்தான் மிளகாய்க்கு ஐரோப்பா தடை

வெள்ளி, 14 டிசம்பர் 2007 (16:57 IST)
பாகிஸ்தான் மிளகாயில் நச்சு தன்மை இருப்பதால், அந்த நாட்டில் இருந்து மிளகாய் இறக்குமதி செய்வதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்துள்ளது.

இந்த தடையால் இந்தியாவிற்கு மிளகாய் ஏற்றுமதி செய்ய அதிக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் சிந்து பிரதேசத்தில் உள்ள விவசாய விளைபொருட்கள் வர்த்த மேம்பாட்டு அமைப்பைச் சேர்ந்த செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:

பாகிஸ்தானில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் மிளகாயில் அப்லாட்டாக்ஸின் என்ற வேதிப் பொருள் இருப்பதாக கூறி, ஐரோப்பிய ஒன்றியம் மிளகாய் இறக்குமதிக்கு தடை விதித்து உள்ளது. அப்லாட்டாக்ஸின் வேதிப் பொருள் புற்று நோயை உண்டாக்கும் நச்சு தன்மை வாய்ந்தது. இதனால் ஏற்றுமதி செய்ய இருந்த இலட்சக்கணக்கான டன் மிளகாய் ஏற்றுமதி செய்யாமல் நிறுத்தப் பட்டுள்ளது.

மிளகாயை செடிகளில் இருந்து பறித்த பிறகு பூஞ்சை தாக்குதலால் அப்லாட்டாக்ஸின் நச்சு உண்டாகி இருக்கின்றது.
இந்த நிலைமை எதிர்காலத்தில் ஏற்படாமல் இருக்க மிளகாய் ஏற்றுமதியாளர்கள், விவசாயிகள், பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் பிப்ரவரி மாதம் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற் கொள்ள போகின்றார்கள். அங்கு மிளகாயை பதப்படுத்தும் முறையை நேரில் பார்த்து தெரிந்து கொள்வார்கள். இந்த வழியை பின்பற்றி மிளகாய் பதப்படுத்தப்படும். இதனால் உலக வர்த்தக அமைப்பின் தர விதிகளுக்கு உட்பட்டு பாகிஸ்தான் வர்த்தகர்களும் மிளகாயை பதப்படுத்துவார்கள். இதனால் எதிர்காலத்தில் பாகிஸ்தான் அதிக அளவு ஏற்றுமதி செய்ய முடியும்.

பாகிஸ்தானைச் சேர்ந்த மிளகாய் விவசாயிகள் இந்தியாவில் இருந்து பதப்படுத்தும் இயந்திரங்களையும், தொழில் நுட்பத்தையும் இறக்குமதி செய்ய முடியுமா என்ற முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர். தற்போது பாகிஸ்தானில் கடைப்பிடித்து வரும் தொழில் நுட்பத்தை நவீன படுத்த முடியும” என்று அவர் கூறினார்.

இந்த வருடம் பாகிஸ்தானில் மிளகாய் செடிகள் புசாரியம் மற்றும் புட்டுயம் என்ற நோய் தாக்குதலுக்கு உள்ளாகியது. மிளகாய் பறித்த பிறகு ஆஸ்பிர்குலியஸ் பால்வஸ் என்ற பூஞ்சை தாக்குதலால் அப்லாட்டாக்ஸின் என்ற நச்சு உண்டாகிவிட்டது.

இந்த வருடம் பாகிஸ்தானில் மிளகாய் உற்பத்தி பாதியாக குறைந்து விட்டது. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் செடிகளில் இருந்து மிளகாய் பறித்த பிறகு ஏற்படும் சேதம் அதிகளவில் உள்ளது. சென்ற ஆண்டு 1 லட்சத்து 22 ஆயிரத்து 900 டன் மிளகாய் உற்பத்தி ஆனது. இந்த ஆண்டு 61 ஆயிரத்து 900 டன்னாக குறைந்து விட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்