தென்னை வளர்ப்புக்கு ரூ.4,700 கோடி உதவி!

செவ்வாய், 11 டிசம்பர் 2007 (14:59 IST)
கேரளா, தமிழ்நாடு உட்பட தென் மாநிலங்களில் பூச்சி தாக்குதலுக்கு உள்ளான தென்னை மரங்களுக்கு பதிலாக புதிய தென்னை மரங்களை வளர்க்க ரூ.4,700 கோடி நிதி உதவி வழங்கப்படும் என்று அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.

கேரள மாநிலம் கொச்சியில் சர்வதேச கயிறு பொருட்களின் வர்த்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியை மத்திய வர்த்தக இணை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் துவக்கி வைத்தார்.

அப்போது அவர் பேசும் போது கயிறு தொழிலுக்கு தென்னை மரங்கள் தான் அடிப்படையானது. தென் இந்தியாவில் உள்ள தென்னை மரங்கள் பூச்சி தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பது கவலையளிக்கிறது.

இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காக மத்திய அரசு பெரிய அளவில் பூச்சி தாக்குதல் மற்றும் உற்பத்தி குறைந்த தென்னை மரங்களுக்கு பதிலாக புதிய தென்னை மரங்களை வளர்க்க நிதி உதவி செய்ய உள்ளது. இதன் படி அடுத்த பத்து முதல் 15 வருடங்களில் 4 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் உள்ள பழைய மரங்களுக்கு பதிலாக புதிய தென்னை மரம் வளர்க்கப்படும். இதற்கு ரூ.4,700 கோடி நிதி செலவிடப்படும்.

புதிய தென்னை மரம் வளர்க்கும் செலவில் மூன்றில் ஒரு பங்கு மத்திய அரசு மானியமாக வழங்கும். மீதம் உள்ள தொகை வங்கிகளில் கடனாக வழங்கப்படும்.

கயிறு, மற்றும் அது தொடர்பான பொருட்களை உற்பத்தி செய்வதில் 80 விழுக்காடு பெண்களே ஈடுபட்டுள்ளனர். இவர்கள் கடுமையாக வேலை செய்ய வேண்டியதுள்ளது. இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்களின் வேலை பளுவை குறைக்க வேண்டிய உதவிகள் செய்யப்படும். இத்துறையை நவீனப்படுத்த மத்திய அரசு ரூ.240 கோடி அளவிலான திட்டத்தை அங்கிகரித்துள்ளது.
இதில் மத்திய அரசு ரூ.100 கோடி நிதி உதவி வழங்கும். ரூ.130 கோடி வங்கிகளில் கடனாக கொடுக்கும். இத்துறையில் பலன் பெறுபவர்கள் ரூ. 10 கோடி ஏற்றுக் கொள்ள வேண்டும்.

சர்வதேச அளவில் இயற்கையான பொருட்களுக்கு நல்ல வரவேற்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் இயற்கையாக கிடைக்கும் தென்னை நாரில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்களுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. இந்த தொழிலுக்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது. எனவே இந்திய தயாரிப்பு என்ற வர்த்தக முத்திரையுடன் சர்வதேச அளவில் வர்த்தகம் செய்வதற்கு நல்ல வாய்ப்பு உள்ளது என்று கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்