கரிப் பருவத்தில் பருப்பு, தானியங்களின் விளைச்சல் அபரிதமாக இருக்கின்றது. இத்துடன் பொதுத்துறை நிறுவனங்கள் பற்றாக்குறையை ஈடுகட்ட பருப்பு வகைகளை அந்நிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து வருகின்றன. இதனால் மொத்த சந்தையில் இவற்றின் விலை குறைந்து வருகிறது.
மும்பை சந்தையில் துவரம் பருப்பு, கடலை பருப்பு வரத்து அதிகளவில் இருப்பதால். இவற்றின் விலை குறைந்து வருகிறது.
இது குறித்து தேசிய விவசாய விளைபொருட்கள் கூட்டுறவு விற்பணை இணையத்தின் ( நஃபீட்) நிர்வாக இயக்குநர் அலோக் ரஞ்சன் கருத்து தெரிவிக்கையில், உளுத்தம் பருப்பு, பயத்தம் பருப்பு விலை ஏற்கனவே குறைந்து விட்டது. ரபி பருவத்தில் கடலை பருப்பு விளைச்சல் நன்றாக இருக்கின்றது. இது அதிகளவு விற்பனைக்கு வரும் போது, இதன் விலையும் குறையும்.
அதே நேரத்தில் தற்போது துவரம் பருப்பு விலை சிறது அதிகமாக இருக்கின்றது. இதன் விலை அதிகரிக்காது. செப்டம்பர் மாதத்தில் இருந்து உளுத்தம் பருப்பு, பயத்தம் பருப்பு விலை விலை குவின்டாலுக்கு ரூ.300 குறைந்துள்ளது. ஜலகான் சந்தையில் செவ்வாய் கிழமையன்று உளுத்தம் பருப்பு விலை குவின்டால் ரூ.3,200 ஆகவும், பயத்தம் பருப்பு விலை குவின்டால் ரூ. 3,000 ஆகவும் இருந்தது. கடலைபருப்பு விலை குவின்டாலுக்கு ரூ.200 குறைந்து குவின்டால் ரூ.2,800 ஆக விற்பனை செய்யப்பட்டது என்று தெரிவித்தார்.
தேசிய பண்டக மாற்று சந்தையில் கடலை பருப்பு முன் பேரத்தில் நவம்பர் மாதம் விலையாக குவின்டால் ரூ.2,316, டிசம்பர் மாதத்தில் ரூ.2,359 ஆக ஒப்பநதம் ஆகி உள்ளது. அரசு அமைப்புகள் 12 லட்சத்து 18 ஆயிரம் டன் பருப்பு, தானியங்களை இறக்குமதி செய்வதற்கு ஒப்பந்தம் செய்துள்ளன. இதில் 6 லட்சத்து 45 ஆயிரம் டன் ஏற்கனவே இந்திய துறைமுகங்களுக்கு வந்து சேர்ந்து விட்டது. மீதம் உள்ளவையும் அடுத்த சில மாதங்களில் இந்தியாவிற்கு வந்து சேர்ந்து விடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த வருடம் கரீப் பருவத்தில் தானிய வகைகள் 55 லட்சத்து 10 ஆயிரம் டன் உற்பத்தியாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. (சென்ற ஆண் டு 47 லட்சத்து 40 ஆயிரம் டன் உற்பத்தியானது). டிசம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் சந்தைக்கு கடலை பருப்பு, துவரம் பருப்பு அதிகளவு விற்பனைக்கு வரத்துவங்கும். அப்போது உளுத்தம் பருப்பு, பயத்தம் பருப்பு வரத்து குறைந்து விடும். ஆஸ்ட்ரேலியாவில் இருந்து கொண்டை கடலையும், தான்ஜானியாவில் இருந்து உளுந்தும் அதிகளவு இறக்குமதி செய்யப்படுகின்றது. அப்போது உள்நாட்டு சரக்கின் விலை 15 விழுக்காடு குறைய வாய்ப்பு உள்ளது.
இவைகளின் இருப்பு தீர்நததவுடன், மீண்டும் விலை உயரும். ஏனெனில் இறக்குமதி செய்யப்படும் தாணியங்களின் விலை அதிகமாக இருக்கும் என்று டில்லி வியாபாரிகள் கருத்து தெரிவித்தனர்.