புவி வெப்பமடைதலால் சீனாவின் உணவு உற்பத்தி பாதிக்கும்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை!
Webdunia
வெள்ளி, 16 நவம்பர் 2007 (17:37 IST)
புவி வெப்பமடைதலால் சீனாவின் உணவு உற்பத்தி எதிர்காலத்தில் பாதிக்கப்படும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
புவி வெப்பமடைந்து வருவதைத் தொடர்ந்து சீனா எதிர்நோக்கியுள்ள சவால்கள் குறித்த அந்நாட்ட விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். இதேநிலை தொடரும் பட்சத்தில் சீனாவின் வெப்பநிலை வெதுவெதுப்பாக மாறுவதுடன், சிலநேரங்களில் வெப்பநிலை அதிகரிக்கலாம். இது சீனத்தின் முக்கிய பயிர்களின் உற்பத்தியைப் பாதிக்கும் என்றும் எச்சரித்துள்ளனர்.
வரும் 2050 ஆம் ஆண்டில் சீனாவின் வெப்பநிலை, 2000ஆம் ஆண்டு அளவுகோலின்படி, சராசரி வெப்பநிலை 2 சென்டிகிரேடு அளவுக்கு உயர்ந்து காணப்படும் என்று சீன வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் ஜெங் தெரிவித்துள்ளார். உணவு உற்பத்திக்கு இடையூறு விளைவிக்கும் வெப்பநிலை மாறுபாட்டு காரணிகள் தொடர்பான கண்காணிப்பு, அதனைச் சீரமைப்பது உள்ளிட்ட பணிகளில் சீன வானிலை ஆய்வு மையத்தைச் சேர்ந்த ஒரு லட்சம் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளார்கள் என்றும் அவர் கூறினார்.
ஸ்பெயின் நாட்டில் உள்ள வெலன்ஷியாவில் நாளை தொடங்க உள்ள 27-வது நாடுகளுக்கிடையேயான வெப்பநிலை குழுவின் கூட்டத்தில் பங்கேற்க செல்லும் ஜெங், வெதுவெதுப்பான வெப்பநிலையில் பயிர்கள் நன்கு வளரும் என்றும், அதே நேரத்தில் அவற்றின் உற்பத்தி குறைந்துவிடும் என்றும் கூறினார்.
ஸ்பெயின் நாட்டின் வெலன்ஷியாவில் நடைபெறும் வெப்பநிலை மாறுபாடு 2007-ன் நான்காவது, இறுதி பகுப்பாய்வு அறிக்கை நாளை கொள்கை வகுப்பாளர்கள் தாக்கல் செய்ய உள்ளனர்.
சீனாவில் தற்போதுள்ள விளைநிலங்களையும், அதன் உற்பத்தி திறனையும் மேம்படுத்தாத நிலையில் வரும் 2030 ஆம் ஆண்டு வாக்கில் 10 விழுக்காடு அளவுக்கு உணவு உற்பத்தி குறையும் என்றும் அப்போது சீனாவின் மக்கள் தொகை 1.5 பில்லியனாக இருக்கும் என்றும் சீன நாளேடு ஒன்று சுட்டிக் காட்டியுள்ளது. அப்போது புதிதாக அதிகரித்துள்ள 200 மில்லியன் மக்களுக்காக கூடுதலாக 100 மில்லியன் உணவுப் பொருட்கள் உற்பத்தி செய்ய வேண்டும். ஆனால் இதற்கு புவி வெப்பநிலை மாற்றம் தடையாக இருக்கும் என்று ஜெங் கூறினார்.
வெப்பநிலை மாற்றம் பல்வேறு நாடுகளின் வேளாண்மைத்துறையின் நிலையை மாற்றி அமைக்கும் என்றும், இதனால் சர்வதேச சந்தைக்கு விற்பனைக்கு வரும் வேளாண் பொருட்களின் அளவு குறையும் என்று அவர் கூறினார். இந்த நிலையில் சீனா தனது வானிலை சூழ்நிலைக்கு ஏற்ற நிலையைக் கண்டறிவதுடன், வெப்பநிலை மாறுபாட்ட காரணிகளைக் குறைக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளது என்றார்.
வெப்பநிலை மாற்றத்தால் உணவு பாதுகாப்பில் ஏற்படும் விளைவுகளைத் தடுக்க முன்கூட்டியே தேவையான அடிப்படை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார். அடுத்த சில ஆண்டுகளில் சீனாவின் ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு வானிலை ஆய்வு மைய ஊழியர் பணியமர்த்தப்படுவார் என்று ஜெங் கூறினார்.
வளர்ச்சியடைந்த நாடுகளில் முதன்முதலாக தேசிய அளவில் வெப்பநிலை மாறுபாட்டைத் தடுப்பது தொடர்பான திட்டத்தை கடந்த ஜூன் மாதம் முதல் நடைமுறை படுத்தி வருவதை சுட்டிக்காட்டி மாநாட்டில் சீனா இப்பிரச்சனையை எவ்வாறு அதிக கவனத்துடன் கையாண்டு வருகிறது என எடுத்துக் கூறுவேன் என்றார்.
வரும் 2010 -க்குள் அதாவது 11-வது 5 ஆண்டு திட்டக் காலத்திற்குள் பசுமை இல்ல வாயுக்களை உருவாக்கும் கார்பன்-டை-ஆக்ஸைடு வெளியேற்றத்தை 240 மில்லியன் டன்னாக குறைக்க திட்டமிட்டுள்ளது. வளரும் நாடுகள் வெப்பநிலை மாறுபாட்டுக்கு காரணமான பசுமை இல்ல வாயுக்களை உருவாக்கும் கரியமில வாயுக்களை வெளியேற்றுவதை தடுக்க பொறுப்புணர்வுடன் செயல்பட முன்வர வேண்டும் என்றும், இதற்குத் தேவையான தொழில் நுட்பங்களை உரியவர்களிடம் பெற்று பயன்படுத்த வேண்டும் என்று வளரும் நாடுகளுக்கு ஜெங் வேண்டுகோள் விடுத்தார்.