ஹரியானா மாநிலத்தில் மண்டிகளில் விவசாயிகள் நெல்லை விற்பனைக்கு மலை போல் கொண்டு வந்து குவிக்கின்றனர். இது வரை விவசாயிகள் 33 லட்சத்து 72 ஆயிரம் டன் நெல்லை கொண்டுவந்துள்ளனர். இதில் 17 லட்சத்து 32 ஆயிரம் டன் மத்திய மாநில அரசு அமைப்புக்கள் கொள்முதல் செய்துள்ளன.
இம் மாநிலத்தில் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்துள்ள விபரத்தை துணை முதல்வர் சந்தர் மோகன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அப்போது அவர், மாநில அரசின் ஹபீட் நிறுவனம் 7 லட்சத்து 1 ஆயிரம் டன், உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கு துறை 5 லட்சத்து 50 ஆயிரம் டன், அக்ரோ இன்டஸ்டிரிஸ் கார்ப்பரேஷன் 2 லட்சத்து 17 ஆயிரம் டன், கான்பீட் நிறுவனம் 1 லட்சத்து 95 ஆயிரம் டன், ஹரியானா வேர்ஹவுசிங் கார்ப்பரேஷன் 58,141 டன், மத்திய அரசின் இந்திய உணவு கழகம் 8,919 டன் கொள்முதல் செய்துள்ளன.
விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்த 48 மணி நேரத்தில் இருந்து 72 மணி நேரத்திற்குள் பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. இதற்காக ரூ. 985 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
பல தனியார் வியாபாரிகளும், ஏற்றுமதியாளர்களும் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்து வருகின்றனர்.