சோயா பீன்ஸ் பயிரிடும் பருத்தி விவசாயிகள்!
செவ்வாய், 13 நவம்பர் 2007 (20:55 IST)
பருத்தி விளைச்சலில் கடந்த காலங்களில் போதிய வருவாய் வராததால் மராட்டிய மாநிலத்தில் உள்ள விதர்பா மண்டல விவசாயிகள் சோயா பீன்ஸ் பயிருக்கு மாறியுள்ளனர்.
வறட்சி, விற்பனை வசதிகள் குறைவு, தரமற்ற விதைகளால் மகசூல் இழப்பு போன்ற காரணங்களால் பருத்தி விளைவித்து வந்த விவசாயிகள், உற்பத்தி நடைமுறைகள் எளிதாகவும், அதே நேரத்தில் அதிக வருவாய் தரும் சோயா பீன்ஸ் பயிரிடத் தொடங்கியுள்ளனர்.
பருத்தியின் விலையும் குறைவு, விளைச்சலும் குறைவு எனவே தற்போது அதிக இடத்தில் சோயா பீன்ஸ், குறைந்த இடத்தில் பருத்தியும் பயிர் செய்து வருகின்றோம் என்று விவசாயிகள் கூறுகின்றனர். ஆரம்பத்தில் சோயா பீன்ஸ் உற்பத்தி செய்ய அதிக செலவானது, ஆனால் தற்போது அதிக இலாபம் கிடைக்கிறது என்று அவர்கள் கூறினர்.
அடுத்த ஆண்டும் அதிக இடத்தில் சோயா பீன்ஸ், குறைந்த இடத்தில் பருத்தியும் பயிரிடுவோம் என்கிறார் விவசாயி நிதின் திர்கே.
விதர்பா பகுதி பருத்தி விளைச்சலுக்கு ஏற்ற இடம்தான் என்றாலும் அரசிடம் இருந்து போதிய ஒத்துழைப்புக் கிடைக்காததால் தான் இந்த நிலைமை என்று விவசாயிகள் கூறுகின்றனர்.
விளைச்சல் காலமும் பருத்தியை விட சோயா பீன்ஸ் குறைவு. ஒரு ஆண்டுக்கு 3 முறை சோயா பீன்ஸைப் பயிரிடலாம். ஆனால் இரண்டு முறை தான் பருத்தி பயிரிட முடியும். பருத்தியில் இருந்து கிடைக்கும் வருவாயும் குறைவு என்கின்றனர் விவசாயிகள்.
ஆண்டுதோறும் பருத்தி விளைச்சல் பரப்பு குறைந்து கொண்டே வருகிறது. தற்போது சோயா பீன்ஸ் மொத்தம் 6,78,000 ஹெக்டேரில் பயிரிடப் பட்டுள்ளது, அதே நேரத்தில் பருத்தி மொத்தம் பயிரிடப் பட்டுள்ள பகுதி 1,93,900 ஹெக்டேர் மட்டும் தான்.
சோயா பீன்ஸ் விட பருத்தி விளைவிக்க கூடுதல் செலவு ஆவதை அம்மாநில வேளாண் அதிகாரிகள் ஒத்துக் கொள்கின்றனர்.
பருத்தி விளைச்சலுக்கு ஆகும் செலவு, சோயா பீன்ஸ் க்கு ஆகும் செலவைவிட அதிகம், சோயா பீன்ஸ் விதையைக் காட்டிலும் பருத்தி விதையின் விலை அதிகம். பருத்தி விளைச்சலுக்கு அதிக உரம்-பூச்சிக்கொல்லிகள் தேவைப் படுகிறது, இதனால் பருத்தியை விளைவிக்க ஆகும் செலவும் அதிகரிப்பதாக நாக்பூர் வேளாண் வளர்ச்சி அதிகாரி கூறுகிறார்.
பருத்தி விவசாயிகளுக்கு முழு ஒத்துழைப்பு தருவதாக மாநில வேளாண்துறை கூறுவதை விவசாயிகள் போலியான அழைப்பு என்று கூறுகின்றனர். பதனிடப் படாத பருத்தி விலையை மாநில வேளாண்துறை அதிகரிக்க முன்வராததையும் விவசாயிகள் குறை கூறுகின்றனர்.
60 கோடி மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் வேளாண்மைத் துறையின் பங்களிப்பு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5-ல் ஒரு பங்குதான். அதே நேரத்தில் நாட்டின் பொதுத்துறை-தனியார் வங்கிகள் இத்துறைக்கு வழங்கியுள்ள கடனளவும் 12-விழுக்காடு மட்டுமே என்பதும் நிதர்சனமான உண்மையாகும்,