ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணை இந்தாண்டு 5 முறை நிரம்பியுள்ளதால் விவசாயிகள் மகிழச்சியில் உள்ளனர்.
தமிழகத்தில் ஜவுளி உற்பத்தியில் மட்டும் இல்லாமல், ஈரோடு மாவட்டம் விவசாயத்திலும் முன்னிலை வகிக்கிறது. மாவட்டத்தில் நெல், கரும்பு, மஞ்சள் போன்ற பாசனப் பயிர் அதிகளவு பயிரிடப்படுகிறது. ஆண்டுதோறும் இரு மண்டலங்களாக 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் சாகுபடி நடக்கிறது. மாவட்டத்தில் பாசனத்துக்கு முக்கிய நீராதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. பவானி ஆற்றின் குறுக்கே மேயாறு கலக்கும் இடத்துக்கு கீழே பவானிசாகர் அணை கட்டப்பட்டு அதன் மூலம் கீழ்பவானி திட்டக்கால்வாய்களான அரக்கன்கோட்டை, தடப்பள்ளி மற்றும் காளிங்கராயன் கால்வாய் பாசன வசதி பெறுகிறது.
அரசு ஆணைப்படி ஆண்டு தோறும் முதல் மண்டலத்துக்கு நஞ்சை பயிர்கள் சாகுபடி செய்ய ஆகஸ்டு 15ம் தேதி முதல் டிசம்பர் 15ம் தேதி வரையும், டிசம்பர் மாதம் 15ம் தேதி முதல் மார்ச் 15ம் தேதி வரை மூன்று மாத காலத்துக்கு புஞ்சை பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. கீழ்பவானி வாய்க்கால் மூலம் ஈரோடு மாவட்ட பகுதி மற்றும் கரூர் மாவட்டத்தில் அரவக்குறிச்சி தாலுகாவை சேர்ந்த சில பகுதி பாசன வசதியை பெறுகிறது. பவானிசாகர் அணை ஆயிரத்து 621.5 சதுர மைல் நீர்பிடிப்பு பரப்பை கொண்டது. 9 மதகு மூலம் ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணையின் நீர்த்தேக்க பகுதியில் ஆண்டுக்கு சராசரியாக ரூ.32 லட்சம் மதிப்புள்ள மீன்கள் பிடிக்கப்படுகின்றன.
அணையின் கீழ்புறம் 11 குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. நடப்பாண்டு கேரள மாநிலம், நீலகிரி மாவட்டத்தில் அதிகளவு மழை பெய்தது. இந்த ஆண்டில் கடந்த ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் மற்றும் நவம்பர் ஆகிய ஐந்து மாதங்கள் தொடர்ந்து அணை நிரம்பியது பவானிசாகர் அணை வரலாற்றில் இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.