தனியார் மரம் வளர்க்க வனத்துறை உதவி

Webdunia

திங்கள், 12 நவம்பர் 2007 (11:22 IST)
ஈரோடு, நாமக்கல் மாவட்டத்தில் தனியார் நிலங்களில் மரம் வளர்ப்பு திட்டத்தின் கீழ், வனத்துறையினர் சார்பாக இரண்டு லட்சம் மரக்கன்று நடப்படுகிறது என மாவட்ட வன அலுவலர் மாலிக் கூறினார்.

மேலும் அவர் கூறியதாவது, இந்தியாவில் 20.64 சதவீதம் வனப்பகுதி உள்ளது. தமிழகத்தில் 20 சதவீதம் வனப்பகுதி உள்ளது. இதை 30 சதவீதமாக அதிகரிக்க தனியார் நிலங்களில் மரம் வளர்ப்புத் திட்டம் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

வறட்சியை தாங்கி, அதிக மகசூல் தரக்கூடிய, சவுக்கு, தைலம், அய்லாந்தஸ் (பெருமரம்) போன்ற மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன. வனத்துறை மூலம் கன்று நடப்படும். இத்திட்டத்தின் கீழ் நடப்படும் மரங்களுக்கோ, மகசூலுக்கோ அரசு உரிமை கோராது. விவசாயிகள் தங்கள் விருப்பம் போல் மகசூலை சந்தையில் விற்பனை செய்து கொள்ளலாம்.

அரசு நிதியை பயன்படுத்தி சிறு, குறு விவசாயிகள் ஊடு பயிராகவோ அல்லது நிலம் முழுவதுமோ வனத்துறை மூலம் நடவு செய்யலாம்.

ஒரு விவசாயி அதிகபட்சமாக ஒரு ஹெக்டேர் அல்லது இரண்டரை ஏக்கர் நிலப்பரப்புக்கு இத்திட்டத்தின் மூலம் பயன்பெறலாம். ஈரோடு, நாமக்கல் மாவட்டத்தில் சிறு, குறு விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு, தலா 2 லட்சம் மரக்கன்று நடவு செய்யும் பணி பத்து நாட்களுக்கு முன் துவங்கப்பட்டது.

ஈரோடு மாவட்டத்தில் 490 சிறு, குறு விவசாயிகள், நாமக்கல் மாவட்டத்தில் 579 விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களின் நிலங்களில் மரங்கள் நடவு செய்யப்படுகிறது.

சத்தி மலைப்பகுதிகளில் தேக்கு நடவு செய்யவும், பிற பகுதிகளில் தேக்கு மற்றும் பெரு மரக்கன்றுகள் நடவும் விவசாயிகள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை பகுதியில் சில்வர் ஓக் மரக்கன்றுகள் நடப்படுகிறது. முதல் கட்டமாக ஈரோடு மாவட்டத்துக்கு ரூ. 9 லட்சத்து 24 ஆயிரமும், நாமக்கல் மாவட்டத்துக்கு ரூ. 9 லட்சத்து 92 ஆயிரமும் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.

விவசாயிகளின் நிலங்களில் நடப்பட்ட மரக்கன்று சேதம் இல்லாமல், வளமாக வளர்க்கப்பட்டிருந்தால், விவசாயிக்கு ரூ. ஆயிரத்து 500ம், ஊடு பயிராக பயிரிட்டுள்ள விவசாயிக்கு ரூ.ஆயிரமும் பரிசு வழங்கப்படும்.

இது ஐந்து ஆண்டு திட்டம். சவுக்கு, சில்வர் ஓக் மரங்கள் ஆறாண்டில் முழு வளர்ச்சியடையும். தேக்கு மரம் ஏழாண்டில் முழு வளர்ச்சி பெறும். மரங்கள் முழு வளர்ச்சி பெற்றதும் தனியார் நிறுவனங்களுடன் தொடர்பு ஏற்படுத்தப்பட்டு, வருமானத்துக்கு வழி வகுக்கப்படும். இந்தியாவில் 20.64 சதவீமாக வனப்பகுதி உள்ளது. இந்தாண்டில் 25 சதவீதமாக கொண்டு வர முயற்சி எடுக்கப்படும். பர்னிச்சர் நிறுவனம், ஸ்போர்ட்ஸ் நிறுவனங்களுக்கு தேவையான மரங்கள் அரசிடம் இல்லை.

இவர்களுக்கு, தனியார் நிலங்களில் வளர்க்கப்படும் மரங்கள் விற்பனை செய்ய வழிவகை செய்யப்படும். ஈரோடு மாவட்டத்தில் சமீபத்திய கணக்கெடுப்பின்படி, 800 முதல் 850 வரை இருந்த யானைகள் ஆயிரத்து நூறாக உயர்ந்துள்ளது. அந்தியூர் பகுதியில் சிறுத்தை, புலிகள் தென்படுகின்றன எ‌ன்று அவர் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்