தமிழ்நாட்டிற்கு நெய்யார் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு!

Webdunia

புதன், 24 அக்டோபர் 2007 (17:36 IST)
நெய்யார் நீர்த் தேக்கத்தில் இருந்நது கன்னியாகுமரி மாவட்ட பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிட கேரள அரசு முடிவு செய்துள்ளது என்று அம்மாநில முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தன் செய்தியாளாகளிடம் இன்று திருவனந்தபுரத்தில் தெரிவித்தார்!

கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு தாலுகாவிற்கு உட்பட்ட விளை நிலங்களுக்குத் தேவையான தண்ணீர் கடந்த 2004 ஆம் ஆண்டு வரை கேரள அரசு எந்தவித சிக்கலுமின்றி பாரம்பரிய நடைமுறையில் தண்ணீர் திறந்துவிட்டு வந்ததாகவும், தற்போது இதுவரை பாசனத்திற்காக நீரை திறக்கவில்லை என்றும், மத்திய அரசிற்கு தமிழக அரசு கடிதம் எழுதியது. மேலும் அக்கடிதத்தில் தண்ணீர் திறந்துவிடுவது தொடர்பாக கேரள அரசுக்கு ஆலோசனை வழங்குமாறும் வலியுறுத்தி இருந்தது.

ஏற்கனவே கேரள மாநில சட்டப் பேரவையில் தமிழகத்திற்கு தண்ணீர் வழங்குவது தொடர்பாக ஒப்பந்தம் செய்துகொள்ள வகை செய்யும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி விவசாயத்திற்கு திறக்கப்படும் தண்ணீருக்கு விலை நிர்ணயம் அவ்வப்போது நிலவும் சூழ்நிலைக்கு ஏற்ப செய்துகொள்ள வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று காலை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கேரள மாநில முதல்வர் அச்சுதானந்தன், கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட விளவங்கோடு தாலுக்காவில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களுக்கு தேவையான தண்ணீரை நெய்யார் நீர்த் தேக்கத்தில் இருந்து திறந்துவிட முடிவு செய்யப்பட்டதாக தெரிவித்தார். மேலும் இது தொடர்பான பணிகளை நீர்வளத்துறை அமைச்சா என்.கே. பிரேமசந்திரன் மேற்கொள்வார் எனத் தெரிவித்தார். இரண்டு மாநிலங்களிலும் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் தண்ணீர் திறந்துவிட முடிவு செய்ததாக அச்சுதானந்தன் மேலும் தெரிவித்தார்.

திறந்துவிடப்படும் தண்ணீருக்கு விலை எதுவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு பதில் அளித்த அச்சுதானந்தன், மாநில சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் அது கணக்கிடப்படும் என்று தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்