காவேரி டெல்டா பகுதியில் இன்று முதல் முறை பாசனம் முறையில் தண்ணீர் திறந்து விடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து ஜூலை மாதம் 17 ந் தேதி காவேரி டெல்டா பகுதியில் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. கல்லணையில் இருந்து ஜூலை மாதம் 21 ந் தேதி முதல் காவேரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய் மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இந்த ஆண்டு 6 முறை மேட்டூர் அணை நிரம்பியது. மேட்டூர் அணையில் இருந்து சுமார் 125 டி.எம்.சி தண்ணீர் பாசனத்திற்காக திறந்து விடப்பட்டது. தற்போது அணையின் நீர் மட்டம் 108.14 அடியாகவும், தண்ணீர் இருப்பு 75.793 டி.எம்.சி யாக இருக்கின்றது.
காவேரி டெல்டா பகுதிகளில் தற்போது சம்பா நடவு முழுமை பெறும் அளவை எட்டியுள்ளது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தேவையான அளவு பெய்யாது என எதிர்பார்க்கப படுகிறது. இதனால் டிசம்பர், ஜனவரி மாதங்களில் சம்பா பயிர்களுக்கு தேவைப்படும் தண்ணீர் இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும். ஆகவே அக்டோபர் 17 ந் தேதி மாலை 6 மணி முதல் டெல்டா பகுதிகளுக்கு முறைப் பாசனம் அமல்படுத்தப்படுகிறது.
இந்த முறைப்பாசன திட்டப்படி முதல் ஆறு நாட்களுக்கு வெண்ணாறில் அதிகளவும், காவேரியில் குறைந்த அளவும் தண்ணீர் திறந்து விடப்படும். அடுத்த ஆறு நாட்களுக்கு காவேரியில் அதிகளவும், வெண்ணாறில் குறைந்த அளவும் தண்ணீர் திறந்து விடப்படும்.
கல்லணைக் கால்வாயில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் வரை தண்ணீரை குறைக்காமல் திறந்து விட திட்டமிடப்பட்டுள்ளது என்று பொதுப் பணித்துறை சிறப்பு தலைமை பொறியாளர் ( கீழ்க்காவேரி வடிநில வட்டம் தஞ்சாவூர் ) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பி்ல தெரிவித்துள்ளார்.