விவசாயிகளுக்கு புதிய கடன் வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் சாகுபடி பணிகள் பரவலாக துவங்க வேண்டிய நேரத்தில் பயிர்க் கடன்கள் கிடைக்காமல் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் மொத்தமுள்ள 80 லட்சம் விவசாயிகளில், 6 லட்சம் விவசாயிகள் மட்டுமே கடன் பெறும் நிலை வழக்கமாக உள்ளது. மீதமுள்ள ஏழை, நடுத்தர விவசாயிகள் நிலுவைக் கடன் பெற முடியாமல் தனியார் மற்றும் கந்து வட்டி பேர்வழிகளிடம் சிக்கி உள்ளனர்.
எனவே கடன் கோரும் அனைத்து ஏழை, நடுத்தர விவசாயிகளுக்கு கூட்டுறவு மற்றும் அரசுடைமை வங்கிகள் கடன் வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த கட்சியின் மாநிலக் குழுக் கூட்டம் திண்டுக்கலில் நடைபெற்றது. இதில் கரும்பு விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனை குறித்து முத்தரப்பு கூட்டத்தை கூட்டி விவாதித்து தீர்வு காண வேண்டுமென மாநில அரசை வற்புறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.