இந்த ஆண்டு வடகிழக்குப் பருவ மழை அக்டோபர் 16ஆம் தேதி முதல் தொடர்ச்சியாக பலமாக பெய்யும் என்று வானிலை ஆய்வாளர் மழை ராஜ் என்கின்ற ராஜூ கூறியுள்ளார்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையைச் சேர்ந்த மழை ராஜ், முழுக முழுக்க மேகங்களை ஆய்வு செய்தே மழை பெய்வதை துல்லியமாக கணித்துக் கூறி வருகிறார்.
"மேகங்களை திறம்பட ஆய்வு செய்வதாலும், வானிலை மாற்றங்களை மிக உன்னிப்பாக கவனிப்பதாலும் பல இயற்கை சீற்றங்களை முன் கூட்டியே கணிக்க முடியும்" என்று மழை ராஜ கூறுகிறார்.
தமிழகத்தில் தற்பொழுது சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. படிப்படியாக மழை அதிகரிக்கும். அக்டோபர் 16ஆம் தேதி முதல் தொடர்ச்சியாக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. அக்டோபர் 16 முதல் 19 வரையும், 21 முதல் 23ஆம் தேதி வரையும், 26 முதல் 29 வரையும் மழையின் தீவிரம் கூடுதலாக இருக்கும்.
பெரும்பாலான நாட்களில் பிற்பகல், இரவு நேரங்களிலும் ஒரு சில நாட்களில் மட்டுமே காலை நேரத்திலும் மழை பெய்யும் என்று மழை ராஜ் கூறுகிறார்.
டிசம்பர் 17ஆம் தேதி வரை வடகிழக்குப் பருவ மழை நீடிக்கும் என்றும், அக்டோபர் 16 முதல் 29ஆம் தேதிக்குள் இரண்டு புயல்கள் உருவாக வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ள மழை ராஜ், இந்த ஆண்டு கடலூர் மாவட்டத்தில் மிக அதிகமாக மழை பெய்யும் என்று கூறியுள்ளார்.
webdunia photo
WD
சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், நாகப்பட்டினம், தஞ்சாவூர் ஆகிய கடலோர மாவட்டங்களில் மிக பலத்த மழையும், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், தர்மபுரி, திருச்சி, கரூர், மதுரை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் பலத்த மழையும், சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது என்று மழை ராஜ் தனது ஆய்வின் மூலம் கணித்துள்ளார்.
இவர் மழை, புயல் மட்டுமின்றி புகம்பம், கடல் கொந்தளிப்பு போன்ற இயற்கை சீற்றங்களையும் முன் கூறி எச்சரித்துள்ளார். 2004ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி வானிலை ஆய்வு செய்த மழை ராஜ், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று எச்சரித்து பத்திரிக்கைகளுக்கு கடிதம் எழுதியிருந்தார். அடுத்த இரண்டு நாட்களில் ஆசியாவை அலரச் செய்த பூகம்பம் ஏற்பட்டு, சுனாமி தாக்கியது. இதற்குப் பின் தான் தனது ஆய்வுக்கு மதிப்புக் கிடைக்கத் துவங்கியது என்று மழை ராஜ் கூறுகிறார்.