இந்தியாவின் உணவுக் களஞ்சியம் என்று அழைக்கப்படும், பஞ்சாப் மாநிலத்தில் அபரிதமான விளைச்சலால் வியாபாரிகள், அரசு அதிகாரிகள் நெல்லை கொள்முதல் செய்ய எப்போது வருவார்கள் என்று விவசாயிகள் காத்துக் கிடக்கின்றனர்.
இந்த வருடம் பஞ்சாப்பில் 25.75 இலட்சம் ஏக்கரில் நெல் பயிடப்பட்டது. பருவ நிலை சாதகமாக இருந்த காரணத்தினால், விளைச்சல் எதிர்பார்த்த அளவு இருக்கின்றது. மொத்தம் 152 லட்சம் டன் நெல் உற்பத்தியாகியுள்ளது.
மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும், விவசாயிகள் நெல்லை விற்பனை செய்வதற்காக கொண்டுவர ஆரம்பித்துள்ளனர். இதை வியாபாரிகளும், அரசு துறையினரும் கொள்முதல் செய்ய துவங்கியுள்ளனர். ஆனால் சந்தைக்கு கொண்டுவரப்படும் நெல், முழுமையாக விற்பனையாகாமல் தேங்கிக் கிடக்கிறது.
பஞ்சாப் மாநிலத்தின் விளைச்சல் குறித்து, லூதியானாவில் அமைந்துள்ள பஞ்சாப் விவசாய பல்கலைக் கழகத்தின் விவசாய பொருளாதார நிபுணரான மகீந்தர் சிங் சிந்து கருத்து தெரிவிக்கையில்,
இந்த பருவம் பல்வேறு காரணங்களினால் விவசாயிகளுக்கு பலவிதங்களில் நன்மையை செய்துள்ளது.
ஆனால் விவசாயிகள் விளைச்சலை விற்பனை செய்ய முடியாமல் பலவிதங்களில் சிரமப்படுகின்றனர். அறுவடை செய்த நெல்லை எங்கே விற்பனை செய்வது என்றுதான் தெரியவில்லை என்று கூறினார்.
இது வரை குறுகிய கால ரகமான சதி ரக நெல் 1,042 டன்னுக்கும் அதிகமாக விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. (சென்ற வருடம் இதே காலகட்டத்தில் 704 டன் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.)
இவை ஜனானா, ஜகரான், சஹினிவால், மசிவ்வரா, ஹத்தூர் மற்றம் சமராலா மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளனர்.
இங்கு 1 குவிண்டால் நெல் ரூ.600 முதல் ரூ.725 வரை கொள்முதல் செய்யப்படுகிறது. வியாபாரிகள் கொள்முதல் செய்ய துவங்கியதால் விலை அதிகரித்துள்ளது என்று விவசாயிகள் தெரிவித்தனர்.
கர்தார் சிங் என்ற விவசாயி கூறும் போது, நான் விற்பனைக்கு கொண்டு வந்த நெல் நல்ல தரமாக இருந்தது. இதனால் வியாபாரிகள் 1 குவின்டாலுக்கு ரூ.717 கொடுத்து வாங்கிக் கொண்டனர். இது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது என்று கூறினார்.
இந்த வருடம் அபரிதமான விளைச்சலால் கிடங்குகளில் டன் கணக்கில் நெல், கோதுமை போன்ற தானியங்கள் வியாபாரிகளை எதிர்பார்த்து தேங்கி கிடக்கின்றன.
பஞ்சாப் மாநில அரசு, நெல் பயிரிடுவதற்கு அதிகளவு நீர் தேவைப்படுவதால், தற்போது நெல் பயிரிடப்படும் பரப்பளவில் சுமார் 10 ஆயிரம் ஏக்கரை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.