எள், மணிலா இறக்குமதி தடையை ரஷ்யா நீக்கியது!

Webdunia

வியாழன், 20 செப்டம்பர் 2007 (13:56 IST)
இந்தியாவில் இருந்து எள், மணிலா கடலையை இறக்குமதி செய்ய விதித்திருந்த தடையை ரஷ்யா நீக்கியுள்ளது.

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எள், மணிலா கடலை ஆகியவற்றில் உடலுக்கு கேடு உண்டாக்கும் இரசாயனம் கலந்திருப்பதாகவும், பூஞ்சான் தாக்குதல் இருப்பதாகவும் கூறி, இதன் இறக்குமதியை ரஷியா தடை செய்திருந்தது. இதனால் இதன் ஏற்றுமதி பாதிக்கப்பட்டது.

தற்போது இந்தியாவின் தரப்பில் இருந்து சர்வதேச தரக் கட்டுப்பாடிற்கு ஏற்ப ஏற்றுமதி செய்வதற்கான உத்திரவாதம் பெறப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், ரஷியா தடையை தற்காலிகமாக நீக்கியுள்ளது.

ரஷ்யாவிற்கு எள், மணிலாவை ஏற்றுமதி செய்வதற்கு முன்பு டில்லியில் உள்ள ஸ்ரீ ராம் இன்ஷ்டியூட் ஆஃப் ஃபார் இன்டஸ்ட்ரியல் ரிசர்ச் என்ற நிறுவனத்திலோ அல்லது அவ்வப்போது அங்கீகரிக்கப்படும் ஏதேனும் ஒரு அமைப்பிடமிருந்து தரச் சான்றிதழ் பெற்று இணைக்க வேண்டும் என்ற நிபந்தனை வித்க்கப்பட்டுள்ளது. அத்துடன் மரபணு மாற்றப்பட்ட எள் ஏற்றுமதி செய்யக்கூடாது எனவும் ரஷியா கூறியுள்ளது.

இந்த சான்றிதழ் பூச்சி கொல்லி மருந்து போன்ற இரசாயண தாக்கம், பூஞ்சான், பூச்சி தாக்குதல் இருக்காது என்பதற்காக பெற வேண்டும்.

இந்திய தரப்பில் இருந்து தடை நீக்கப்பட்ட நான்கு மாத காலத்திற்கு, பயிர் வளரும் பருவத்திலும், மற்றும் இருப்பில் இருக்கும் போது பாதுகாக்க பயன்படுத்தப்பட்ட பூச்சி கொல்லி மருந்துகள், போன்ற விபரங்களை அங்கீகாரம் பெற்ற நிறுவனத்திடம் இருந்து பெற்று, ரஷ்ய அதிகாரிகளுக்கு அனுப்புவார்கள்.

இந்த தரக்கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்காவிட்டால், மீண்டும் அடுத்த வருடம் ஜனவரி 15 ந் தேதி முதல் மீண்டும் தடை விதிக்க வாய்ப்பு இருப்பதாக ஏற்றுமதியாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

இந்திய ஏற்றுமதியாளர்கள் தரப்பில் , ரஷ்யா விதித்துள்ள தரக்கட்டுப்பாடுகளை கடைபிடிக்கும் முயற்சி எடுக்கப்படுகிறது. இதற்காக மும்பையில் வருகின்ற 25 ஆம் தேதி மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட வனம் சார்ந்த விளைபொருட்கள் ஏற்றுமதி ஊக்குவிப்பு அமைப்பின் உறுப்பினர்கள், மத்திய அரசின் ஏற்றுமதி தரப்பரிசோதனை துறையின் பிரதிநிதிகள், ஸ்ரீ ராம் இன்ஷ்டியூட் ஆஃப் ஃபார் இன்டஸ்ட்ரியல் ரிசர்ச்சைச் சேர்ந்த பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொள்ளும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் தரக் கட்டுப்பாட்டு சான்றிதழை பெறுவதற்கும், இதற்காக கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்தும் விவாதிக்கப்படும்.

வெப்துனியாவைப் படிக்கவும்