திருச்சியில் வாழை உற்பத்தி மற்றும் பயன்பாடு மாநாடு!

Webdunia

செவ்வாய், 18 செப்டம்பர் 2007 (13:57 IST)
தேசிய வாழை ஆராய்ச்சி மையம், திருச்சியில் இரண்டு நாள் தேசிய அளவிலான கருத்தரங்கை நடத்த உள்ளது. இந்த கருத்தரங்கு பொருளாதார, ஊட்டச்சத்து பாதுகாப்புக்கான வாழைப்பழம் உற்பத்தி மற்றும் பயன்பாடு என்ற தலைப்பில் நடைபெறுகிறது. இந்த கருத்தரங்கு அக்டோபர் 25 ந் தேதி தொடங்கி இரண்டு நாட்கள் நடைபெறும்.

இந்த கருத்தரங்கு 12 அமர்வுகளாக நடைபெறும். இதில் படங்களுடன் விளக்கம் அளிக்கப்படும் சமீபத்தில் ஏற்பட்டுள்ள வாழை பயிரிடும் முறையின் நவீன உத்திகள் குறித்து விளக்கப்படும்.

கருத்தரங்கின் ஒரு பகுதியாக வாழையின் நவீன ஆய்வுகளான திசு வளர்ப்பு, சொட்டு நீர் பாசனம் குறித்த கண்காட்சியும் நடைபெறும். வாழை பயிரிடும் விவசாயிகள், திட்ட அதிகாரிகள், கொள்கை வகுப்பாளர்கள், மற்றும் ஆராய்ச்சியாளர்கள் இடையே தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவது, நவீன உற்பத்தி முறைகள் ஆகியன குறித்து கலந்துரையாடலும் நடைபெறும்.

கருத்தரங்கில் பங்கேற்கும் பிரதிநிதிகள் அதிக அளவில் வாழை பயிரிட்டுள்ள பகுதிகளுக்கும், இயற்கை உரத்தை பயன்படுத்தி வாழை பயிரிட்டுள்ள பகுதிகளுக்கும், சிறு அளவிலான பதப்படுத்தும் தொழிற் கூடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டு நேரடியாக விளக்கம் அளிக்கவும், அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவும் வசதியாக நேரடியாக அழைத்துச் செல்லப்படுவார்கள்.

இந்த கருத்தரங்கு மூலம் ஆராய்ச்சியாளர்கள், அரசு வேளாண் துறை அதிகாரிகள், முற்போக்கு விவசாயிகள், தொழில் முனைவோர், வர்த்தகர்கள் ஆகியோர் வாழை உற்பத்தி எதிர்நோக்கும் இடர்பாடுகள், எதிர்காலத்தில் உற்பத்தியை அதிகரிக்கவும்,, வாழை பயிரிடும் பகுதியை விரிவு படுத்தவும் தேவையான உத்திகளை வகுக்கும் வகையில் விவாதங்கள் நடைபெறும்.

இந்த கருத்தரங்கில் நாடு முழுவதிலும் இருந்து 300 பிரதிநிதிகளும், 250 விவசாயிகளும் கலந்து கொள்வார்கள் என்று தேசிய வாழை ஆராய்ச்சி மைய இயக்குநர் எம். எம். முஸ்தபா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்