தஞ்சை சமவெளியில் மிளகு சாகுபடி சாதனை!

பொதுவாக மலைப்பகுதிகளில் மட்டுமே பயிரிடப்படும் மிளகை தஞ்சை சமவெளிப் பகுதியில் தென்னைக்கு ஊடு பயிராக சாகுபடி செய்து விவசாயி ஒருவர் சாதனை படைத்துள்ளார்!

மிளகு வாசனை பொருட்களில் ஒன்று. இது குறைந்த அளவு தண்ணீரில் மலைப்பகுதிகளில் மட்டுமே சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக கன்னியாகுமரி, நாகர்கோயில், கம்பம், தேனி, குமுளி ஆகிய இடங்களில் சாகுபடி செய்யப்படுகிறது. அதன் மூலம் விவசாயிகளுக்கு நல்ல வருவாய் கிடைக்கிறது.

இதுவரை மலைப் பிரதேசங்களில் மட்டுமே சாகுபடி செய்துவந்த மிளகு பயிர் முதன் முறையாக சமவெளி பகுதிகளில் களிமண், வண்டல் மண் பகுதியான காவேரி டெல்டாவில், தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் சாகுபடி செய்யப்பட்டு முதல் தரமான மிளகு ஆக நல்ல மகசூல் கிடைத்துள்ளது. இது ஓர் சாதனை ஆகும்.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தென்னை விவசாயி பழனிவேல் சமவெளி பகுதியில் உள்ள தனது தென்னந்தோப்பில் 600 மரங்களுக்கிடையே 3 ஆயிரம் மிளகு செடியை 2000 ஆவது ஆண்டு நட்டார். அது தென்னை மரங்களை பிடிமானமாகக் கொண்டு கொடியாக படர்ந்து இந்த ஆண்டு மகசூல் அளிக்கத் தொடங்கி உள்ளது.

நூற்றாண்டு பயிராக உள்ள தென்னையில் 40 ஆண்டு பயிராக மிளகு உள்ளது. இது நன்கு வளர்ந்து, பூத்து, காய்விட்டு, பழம் பின்பு மிளகு ஆக நல்ல மகசூல் கிடைக்கிறது.

அவ்வாறு உற்பத்தி ஆகும் மிளகு உயர்தரம் உடையதாக உள்ளது. விவசாயி பழனிவேல் அவரது மனைவி மற்றும் அவரது குடும்பத்தினரின் கடின உழைப்பு, விடாமுயற்சி ஆகியவற்றினால் சமவெளி பகுதியில் மிளகு உற்பத்தி செய்ய முடியும் என்பதை நிரூபித்து காட்டியுள்ளனர்.

இந்த சாதனையை தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு முன்னோடி விவசாயிகள் வந்து பார்த்து சாகுபடி முறை பற்றி கேட்டு தெரிந்து செல்லுகின்றனர்.

தமிழக அரசின் தோட்டக்கலைத் துறை அதிகாரி குமரன், விவசாயி பழனிவேலுக்கு 4,000 மிளகு செடியை கொடுத்துள்ளார். அவர் அளித்த ஊக்கம் மற்றும் பயிற்சியினால் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். நெல்லை மட்டுமே நம்பிவந்த காவேரி டெல்டா விவசாயிகள் குறைந்த அளவில் தண்ணீரை பயன்படுத்தியும், குறைந்த செலவில் மாற்று பயிராகவும், பணப்பயிராக உள்ள மிளகு சாகுபடி சமவெளி பகுதிக்கு ஏற்றது ஆகும்.

காவேரி டெல்டா விவசாயிகள் இவ்வாறு மாற்று பயிர் பற்றி சிந்தித்து மிளகு போன்ற பணப் பயிர்களை சாகுபடி செய்தால் சென்ற ஆண்டு ஏற்பட்ட வறட்சியினால் ஏற்பட்ட வறுமை, பட்டினிச் சாவு போன்றவற்றில் இருந்து விடுபட்டு நல்ல நிலைக்கு உயர்வார்கள் என்பது நிச்சயம்

வெப்துனியாவைப் படிக்கவும்