ஜனநாயகத்தை வீழ்த்தியது பணநாயகம் : வைகோ
சனி, 16 மே 2009 (17:33 IST)
தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணியினர் சுனாமி வெள்ளமாக தொகுதிகளுக்குள் செலுத்திய ஊழல் பணத்தால் ஓட்டுகளை விலைக்கு வாங்கிய பணநாயகத்தால், பல தொகுதிகளில் ஜனநாயகம் சாகடிப்பட்டு விட்டது என்று ம.தி.மு.க பொதுக் செயலர் வைகோ கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், நடைபெற்ற 15வது நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டிலும், புதுவையிலும் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணியினர் சுனாமி வெள்ளமாக தொகுதிகளுக்குள் செலுத்திய ஊழல் பணத்தால் ஓட்டுகளை விலைக்கு வாங்கிய பணநாயகத்தால், பல தொகுதிகளில் ஜனநாயகம் சாகடிப்பட்டது. அதையும் மீறி அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா தலைமையில் அமைந்த கூட்டணி 13 தொகுதிகளில் பெற்று உள்ள வெற்றி, ஜனநாயகத்திற்கு சூட்டப்பட்ட மகுடம் ஆகும்.
விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் என்னை வேட்பாளராக ம.தி.மு.க. அறிவித்தவுடன், முதலாவது செய்தியாளர் சந்திப்பில் என்னை எதிர்த்துப் போட்டியிடும் வேட்பாளர் யார் என்றால், ஊழல் பணம் என்று குறிப்பிட்டேன். என்னுடைய தொகுதியில் ஒரு ஓட்டுக்கு 500 ரூபாய் வீதம் வாக்காளர்களுக்கு வீடுவீடாக பணத்தை வழங்கினார். வாங்க மறுத்த வீடுகளுக்கு உள்ளும் பணக்கவர்கள் திணிக்கப்பட்டன. பல இடங்களில் மே 10, 11,12 ஆகிய மூன்று நாள்களிலும், காவல்துறையின் துணையோடு பணம் வழங்கப்பட்டது.
வாக்குப்பதிவு தொடங்கும் முன்பே இதை அறிந்தநான், அன்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது, 'எனது நேர்மைக்கும், நான் ஆற்றிய பணிகளுக்கும் உரிய வாக்குகள் எனக்குக் கிடைக்காது, அண்ணா தி.மு.க. கூட்டணி பலத்தால் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறக்கூடும்' என்று சொன்னேன்.
அராஜக சக்திகள் மலை அளவு குவித்த பணத்தையும் மீறி எனக்கு வாக்கு அளித்த வாக்காளப் பெருமக்களுக்கும், விருதுநகர் தொகுதியில் நான் போட்டி இடுவதாக அறிவிக்கப்பட்ட நாள் முதல் பசிநோக்காது, கண்துஞ்சாது அல்லும் பகலும் அயராது உழைத்துப் பாடுபட்ட அ.தி.மு.க.வின் முன்னணியினர் தொண்டர்களுக்கும், கூட்டணிக் கட்சிகளான பாட்டாளி மக்கள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அகில இந்திய பார்வர்டு பிளாக், அகில இந்திய மூவேந்தர் முன்னணிக்கழகம் மற்றும் மனிதநேய மக்கள் ஆகிய கட்சிகளின் முன்னணியினர், தொண்டர்கள் உள்ளிட்ட, தேர்தல் களத்தில் களப்பணி ஆற்றிய சகோதர சகோதரிகளுக்கும், இமைப்பொழுதும் நெஞ்சில் நீங்காது என்னை இயக்கிக் கொண்டு இருக்கின்ற ம.தி.மு.க. கண்மணிகள் அனைவருக்கும் என் இதயத்தின் ஆழத்தில் இருந்து பீறிடும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தக் களத்தை இழந்தாலும், இனி எதிர்வரும் களங்களை வெல்வோம் எனும் நம்பிக்கையுடன் தமிழ்நாட்டின் நலன் காக்க, ஈழத் தமிழர் துயர் துடைக்க, இந்திய ஜனநாயகத்துக்கு வலுவூட்ட ம.தி.மு.க. பயணத்தை, நெஞ்சுரத்தோடு முன்பைக் காட்டிலும் முனைப்புடன் தொடர்வோம் எனத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று வைகோ கூறியுள்ளார்.