பிரதமர் பதவிக்கான போட்டியில் இல்லை - பவார்

சனி, 16 மே 2009 (16:40 IST)
பிரதமர் பதவிக்கான போட்டியில் தான் இல்லை என்றும், மன்மோகன் சிங் தான் பிரதமர் என்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார் கூறியிருக்கிறார்.

நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி, காங்கிரஸ் கடந்த தேர்தலை விட அதிக இடங்களில் வெற்றிமுகம் காட்டியபோது தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், பிரதமர் பதவி போட்டியில் தான் இல்லை என்பதை வெளிப்படுத்தினார்.

மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஐக்கிய முற்போக்கு கூட்டணியால் மட்டுமே நிலையான அரசை மத்தியில் அமைக்க முடியும் என்று மக்கள் நம்பி உள்ளனர் என்று கூறினார்.

தற்போதைய முடிவுகளின்படி, மத்தியில் நிலையான அரசு அமைக்க தடையேதும் இல்லை. பிரதமர் பதவிக்கு மன்மோகன் சிங்கை காங்கிரஸ் முன்னிறுத்தி உள்ளது. காங்கிரஸ் தேவையான உறுப்பினர்களை பெற்றுள்ள நிலையில், காங்கிரசின் முடிவை (மன்மோகன் சிங்கே பிரதமர்) கூட்டணி கட்சிகளும் வழிமொழியும் என்றும் அவர் கூறினார்.

தமிழகம், மேற்கு வங்காளம், ஆந்திரா ஆகிய மாநிலங்கள் தான் நிலைமையை மாற்றி விட்டன. இடதுசாரி கட்சிகளுடைய ஆதரவு தேவைப்படுமா என்றால், ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு இப்போதும் சில இடங்கள் குறைவாகவே உள்ளன.

எனவே இப்போது யாருடைய ஆதரவும் வேண்டாம் என்று கூற மாட்டோம். கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி நல்லதொரு வெற்றியை பெற்றிருக்கிறது என்று பவார் குறிப்பிட்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்