தொகுதிக் கண்ணோட்டம் : அரக்கோணம்

வேலூர் மாவட்டத்தில் உள்ள அரக்கோணம், மத்திய ரயில்வே இணையமைச்சர் ஆர். வேலுவின் தொகுதியாக விளங்குகிறது. 'ஆறகோணம்' என்ற பெயர் மருவி அரக்கோணம் என்று அழைக்கப்படுகிறது. தென்னிந்தியாவின் முக்கிய ரயில் நிலையச் சந்திப்புகளில் அரக்கோணமும் ஒன்றாகும்.
webdunia photoWD

1977ஆம் ஆண்டு இந்த மக்களவைத் தொகுதி ஏற்படுத்தப்பட்டது. அப்போது முதல் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக அரக்கோணம் தொடர்ந்து இருந்து வந்துள்ளது. 1977ஆம் ஆண்டு முதல் 1991 தேர்தல் வரை இத்தொகுதியில் அக்கட்சியே வெற்றி பெற்று வந்துள்ளது.

கடந்த 1996ஆம் தேர்தலில் ஜி.கே. மூப்பனார் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸும், 1998ல் அ.தி.மு.க.வும், 1999ல் தி.மு.க.வும் அரக்கோணம் தொகுதியைக் கைப்பற்றின.

கடந்த 2004ஆம் ஆண்டுத் தேர்தலில் பா.ம.க. சார்பில் போட்டியிட்ட ஆர்.வேலு 3 லட்சத்து 86 ஆயிரத்து 911 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் சண்முகத்திற்கு இரண்டு லட்சத்து 84 ஆயிரத்து 715 வாக்குகள் கிடைத்தன.

அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் முன்பிருந்த சட்டப் பேரவைத் தொகுதிகள்: பள்ளிப்பட்டு, அரக்கோணம் (தனி), சோளிங்கர், ராணிப்பேட்டை, ஆற்காடு, செய்யாறு.

தொகுதி மறுசீரமைப்புக்குப் பின் இடம்பெற்றுள்ள தொகுதிகள்: திருத்தணி, அரக்கோணம் (தனி), சோளிங்கர், காட்பாடி, ராணிப்பேட்டை, ஆற்காடு.