தொகுதிக் கண்ணோட்டம் : தென் சென்னை

தலைநகர் சென்னையில் அமைந்துள்ள முக்கியத் தொகுதிகளில் தென் சென்னையும் ஒன்று. கடந்த 4 தேர்தல்களில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர், மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு.
webdunia photoWD

கடந்த 1957 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இத்தொகுதி, அகில இந்திய காங்கிரஸ், தி.மு.க. கட்சிகளிடம் மாறிமாறி இருந்து வந்துள்ளது. 1957, 1977, 1980, 1984, 1989 ஆம் ஆண்டுகளில், இத்தொகுதி காங்கிரஸ் வசமிருந்தது.

1962, 1967, 1971, 1996, 1998, 1999, 2004 ஆம் ஆண்டுத் தேர்தல்களில் தி.மு.க. வசமிருந்தது. 1967ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் தி.மு.க. பொதுச் செயலர் அண்ணா இத்தொகுதியில் நின்று வெற்றி பெற்றார். அந்தத் தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடித்ததையடுத்து அண்ணா தமிழகத்தின் முதலமைச்சரானார். இடைத்தேர்தலில் முரசொலி மாறன் தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

கடந்த 1996 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 4-வது முறையாக டி.ஆர். பாலு, தென் சென்னை மக்களவைத் தொகுதி உறுப்பினராக இருந்து வருகிறார்.

கடந்த 2004ஆம் ஆண்டு தேர்தலில் டி.ஆர். பாலுவுக்கு 5 லட்சத்து 64 ஆயிரத்து 578 வாக்குகள் கிடைத்தன. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பதர் சயீத் (அ.தி.மு.க.) 3 லட்சத்து 43 ஆயிரத்து 838 வாக்குகளைப் பெற்று தோல்வியடைந்தார். வாக்கு வித்தியாசம் 2 லட்சத்து 20 ஆயிரத்து 740.

தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து தென் சென்னைத் தொகுதிக்கு பல்வேறு திட்டங்களை அமைச்சர் டி.ஆர்.பாலு நிறைவேற்றியுள்ளதால், தொகுதி மக்களிடையே அவருக்கு அவப்பெயர் எதுவுமில்லை.

தென் சென்னை தொகுதியில் இருந்த ஆலந்தூர், தாம்பரம் தொகுதிகளும், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பல்லாவரம், மதுரவாயல், அம்பத்தூர் உள்ளிட்ட தொகுதிகளும், தொகுதி மறு சீரமைப்பு காரணமாக ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கு சென்றுவிட்டன. இதனால், வரும் தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட டி.ஆர்.பாலு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

முன்பு தனி தொகுதியாக இருந்த ஸ்ரீபெரும்புதூர் தொகுதி தற்பொழுது பொது தொகுதியாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தென் சென்னையில் முன்பிருந்த சட்டப் பேரவைத் தொகுதிகள்: தியாகராய நகர், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், சைதாப்பேட்டை, ஆலந்தூர், தாம்பரம்.

தொகுதி மறு சீரமைப்புக்குப்பின் இடம் பெற்றுள்ள சட்டப் பேரவைத் தொகுதிகள்: விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தியாகராய நகர், மயிலாப்பூர், வேளச்சேரி, சோளிங்கநல்லூர்.

நீக்கப்பட்ட/மாற்றப்பட்ட தொகுதிகள்: திருவல்லிக்கேணி, ஆலந்தூர், தாம்பரம்.

சேர்க்கப்பட்ட தொகுதிகள்: வேளச்சேரி, சோளிங்கநல்லூர்.