உள்ளூர் சந்தையில் மீன் விற்பனை அதிகரிப்பதற்காக சில்லறை மீன் கடை துவக்குபவர்களுக்கு 20 முதல் 25 விழுக்காடு அளவிற்கு மத்திய அரசு மானியம் வழங்க திட்டமிட்டுள்ளது.
பொதுவாக மீன் சந்தையில் சுகாதாரமான சூழ்நிலை இருப்பதில்லை. மீன் வாடை அடிப்பதால் பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். இந்த நிலையைப் போக்க சுகாதாரமான சூழ்நிலையில் மீன் மொத்த விற்பனை, சில்லறை விற்பனை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, உள்ளூர் மீன் சந்தையை சுத்தம், சுகாதாரத்துடன் மேம்படுத்துவதே இந்த திட்டத்தின் நோக்கம் ஆகும். மீன் கடையை நவீனப்படுத்த உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதல், புதிதாக மொத்த மீன் விற்பனை மையம் தொடங்குதல் ஆகியவற்றிற்கு மானியம் வழங்கப்படும்.
ரூ. 1 கோடி மதிப்புள்ள கடை பெரிய மீன்கடை என்றும், ரூ.50 லட்சம் மதிப்புள்ள கடை நடுத்தர மீன்கடை என்றும், ரூ.10 லட்சம் மதிப்புள்ள கடை சிறிய மீன்கடை என்றும் வகைப்படுத்தப்பட்டு உள்ளது. மொத்த மீன்கடையைப் பொருத்தவரை கடையை நவீனப்படுத்துவதற்கான மூலதனச் செலவில் 20 முதல் 25 சதவீதத்தை தேசிய மீன்வள வாரியம் மானியமாக வழங்குகிறது. சுகாதாரத் தரத்துடன் புதிய மீன் கடை கட்டினால் அதற்கும் இந்த மானியம் அளிக்கப்படும்.
உதாரணத்திற்கு ரூ.1 கோடியில் பெரியளவில் மீன் கடையைத் தொடங்கினால் ரூ.25 லட்சம் இலவசமாக (மானியம்) கிடைக்கும். ரூ.10 லட்சம் என்றால் ரூ.21/2 லட்சம் மானியம் கிடைக்கும்.