ஆசிரியர் தேர்வு முறையாக நடைபெற்றுள்ளது : தேர்வு வாரிய தலைவர்
புதன், 31 டிசம்பர் 2008 (17:47 IST)
அரசாணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ள விதிமுறைகள் அனைத்திலும் எவ்வித மாற்றமும் ஏற்படாமல் 7,500 பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு முறையாக நடைபெற்றுள்ளது என்று ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :
அரசு உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகள், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைப் பள்ளிகள் மற்றும் ஆதி திராவிடர் நலப் பள்ளிகளில் காலியாக உள்ள 7,500 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு 1: 5 என்ற விகிதத்தில் வேலை வாய்ப்பகத்தில் பட்டியல் பெற்று 1: 2 என்ற விகிதத்தில் சான்றிதழ் சரிபார்த்தல் செய்யப்பட்டன.
உயர் நீதிமன்றம் 23-12-2008 அன்று பட்டதாரி ஆசிரியர்களை நியமித்துக் கொள்ள விதித்திருந்த தடையினை விலக்கிக் கொள்ள ஆணையிட்டபின் ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் ஆகியவற்றிற்கான தெரிவு முடிவுகள் வெளியிடப்பட்டன.
தெரிவு முடிவுகள் இணைய தளத்தின் வாயிலாக வெளியிடப்பட்டன. மேலும் கண்பார்வையற்றோருக்கான சிறப்புப் பிரிவில் சுமார் 200 பணியிடங்களுக்கான தெரிவு வரலாறு மற்றும் தமிழ் பாடங்களில் செய்யப்பட்டது. அதன் முடிவுகளும் இணைய தளத்தின் மூலமாக வெளியிடப்பட்டன.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் சான்றிதழ் சரிபார்த்தலின் அடிப்படையில அனுப்பப்பட்ட பல்வேறு தகவலின்படி சில நபர்களின் தெரிவு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டு அதில் சுட்டிக் காட்டப்பட்டுள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து சம்பந்தப்பட்ட பணிநாடுநர்கள் 12-01-2009-க்குள் ஆசிரியர் தேர்வு வாரியத்தில் தெரிவித்து, தகுதியான நபர்கள் தெரிவு ஆணை பெறலாம் என அனைவருக்கும் தபால் மூலம் தகவல் அனுப்பப்பட்டுள்ளது.
இருப்பினும், 29-12-2008 அன்று சிலர் தங்கள் பெயர்கள் பட்டியலில் இடம் பெறவில்லை என ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு வருகை தந்தனர். அவர்களுக்கு வரையறுக்கப்பட்ட தேதி (cut off date) மற்றும் தெரிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டதற்கான காரணம் அனைத்தும் தெரிவிக்கப்பட்டும் விளம்பர பலகையில் ஒட்டியும் கூட அவர்கள் திருப்தி அடையவில்லை.
இந்நிலையை சமாளிக்க காவல்துறையினர் உதவி கோரப்பட்டது. அவர்களும் உரிய நேரத்தில் வருகை தந்து பிரச்சினையை தீர்க்க உதவி செய்தனர். பணிநாடுநர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க 30-12-2008 அன்று 10-ககும் மேற்பட்ட அலுவலர்களை கொண்டு நிறுத்தி வைக்கப்பட்ட தெரிவர்களின் முடிவினை உடனுக்குடன் நேரிலேயே வழங்கப்பட்டன.
அரசாணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ள விதிமுறைகள் அனைத்திலும் எவ்வித மாற்றமும் ஏற்படாமல் முறையாக இத்தேர்வு செய்யப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு அலுவலகத்தின் பட்டியலில் உள்ள அனைத்துப் பெயர்களும் பரிசீலிக்கப்பட்டு தக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.