ஊனமுற்றோருக்கு கணினிப் பயிற்சி!

செவ்வாய், 30 செப்டம்பர் 2008 (17:18 IST)
காஞ்சீபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஊனமுற்றோருக்கு உதவித்தொகையுடன் கூடிய கணினிப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கான தேர்வு வரும் 14 ஆம் தேதி நடைபெறுகிறது.

இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தோஷ் கே.மிஸ்ரா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழ் நாடு ஊனமுற்றோர் மறுவாழ்வுத்துறை, ஊனமுற்றோருக்கு சிறப்பு தொழிற்பயிற்சிகளை அளிக்கவுள்ளது. இதன்படி கை, கால் ஊனமுற்றவர்கள், காது கேளாதோருக்கான 6 மாத கணினி பயிற்சி, பல்லாவரம் மீனாட்சி கிருஷ்ணன் தொழில்நுட்ப கல்லூரியில் வழங்கப்பட இருக்கிறது.

இதேபோல், சென்னை பூந்தமல்லியில் உள்ள பார்வையற்றோர் தேசிய நிறுவனத்தின் வட்டார நிலையத்தில் பார்வையற்றோருக்கு 6மாத கணினி பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் சேருவதற்கு விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

கை, கால் ஊனம், காது கேளாதவர்களுக்கு செங்கல்பட்டு மருத்துவ கல்லூரியில் 2 ஆண்டு 'ஆய்வுக்கூட தொழில்நுட்ப பட்டய படிப்பு' நடத்தப்படுகிறது. இந்த வகுப்புகள் வரும் 15 ஆம் தேதி முதல் தொடங்கும்.

பிளஸ் 2 வகுப்பில் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது உயிரியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் ஆகிய பாடங்களில் தேர்ச்சி பெற்றவர்கள் இதில் சேரலாம். விண்ணப்பதாரர்கள் 17 வயது முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.

இந்த பயிற்சியில் சேர விரும்புவோர் வரும் 14 ஆம் தேதியன்று செங்கல்பட்டில் உள்ள மாவட்ட மறுவாழ்வு மையத்தில் காலை 10 மணிக்கு நடைபெறும் நேர்முகத் தேர்விற்கு, தங்களின் அசல் கல்விச் சான்றிதழ்களுடன் வர வேண்டும்.

வெப்துனியாவைப் படிக்கவும்