இந்திய வங்கியியல் துறை மற்றும் ரிசர்வ் வங்கி பற்றிய் ஆர்வத்தை மாணவர்கள் இடையே ஏற்படுத்தும் நோக்கத்துடன், போட்டித் தேர்வுகள் மூலம் 150 பேருக்கு 'யங் ஸ்காலர்' விருதுகளை வழங்க இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்.பி.ஐ.) முடிவு செய்துள்ளது.
இதன்படி நாடு முழுவதும் போட்டித் தேர்வுகள் மூலம் இவ்விருதுக்கான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்தியாவில் வங்கிகளின் செயல்பாடுகள் மற்றும், ஆர்.பி.ஐ. யின் பங்குகள் தொடர்பான கேள்விகள் இத்தேர்வில் கேட்கப்படும். ஆங்கிலம் மற்றும் முக்கியமான பிராந்திய மொழிகளில் தேர்வு நடத்தப்படும்.
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்கள், தற்போது படித்துக் கொண்டிருப்பவர்கள் இத்தேர்வை எழுதலாம். வயது 18 முதல் 23-க்குள் இருக்க வேண்டும்.
இவ்விருதுக்கு தேர்ந்தெடுக்கப்படுவோர் ஆர்.பி.ஐ. அறிவிக்கும் அலுவலகங்களில் 2 அல்லது 3 மாதங்களுக்கு பணி புரிய வேண்டும். அப்போது மாதம் ஒன்றுக்கு ரூ. 7,500/- தொகுப்பு உதவித்தொகை வழங்கப்படும். வெளியூர் நபர்களுக்கு தங்குமிடம், உணவுக்கு ஏற்பாடு செய்து தரப்படும்.
வரும் 2009 ஜனவரி மாதம் 11 ஆம் தேதி 'யங் ஸ்காலர்' விருதுக்கான தேர்வுகள் நடத்தப்படும். இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் செலுத்தத் தேவையில்லை. விண்ணப்பத்தினை வரும் அக்டோபர் 24 ஆம் தேதிக்குள் " இன்ஸ்டிட்யூட் ஆப் பேங்கிங் பர்சனல் செலக்ஷன், ஐ.பி.பி.எஸ் ஹவுஸ், அஞ்சல் பெட்டி எண்.8587, மும்பை - 400 101 " என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். இதுதொடர்பான மேலும் விவரங்களை 'டபிள்யூ டபிள்யூ. டபிள்யூ.ஆர்பிஐ.ஓஆர்ஜி/யங்ஸ்காலர்ஸ் என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.