'மாணவர்களுக்கான 'யங் வேர்ல்ட் குவிஸ்'!

திங்கள், 29 செப்டம்பர் 2008 (16:49 IST)
'தி இந்து' பத்திரிக்கை நடத்தும் 'யங் வேர்ல்ட்' பொது அறிவு வினாடி- வினா (குவிஸ்) நிகழ்ச்சி வரும் அக்டோபர் 15 ஆம் தேதி சென்னையில் தொடங்குகிறது.

ஒன்பதாவது முறையாக நாடு முழுவதும் 13 இடங்களில், மண்டலங்கள் வாரியாக இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதன் இறுதிச் சுற்று வரும் நவம்பர் மாதம் 13 ஆம் தேதி விசாகப்பட்டிணத்தில் நடக்கிறது.

'யங் வேர்ல்ட்' பொது அறிவு வினாடி- வினாவில், தேசிய அளவில் முதலிடம் பெறும் அணிக்கு ரூ.16,000-ம், இரண்டாம் இடம் பெறும் அணிக்கு ரூ.12,000-ம், மூன்றாவது இடத்தை பெறும் அணிக்கு ரூ. 8,000-ம் பரிசளிக்கப்படுகிறது.

இதேபோல் மண்டல அளவில் முதலிடம் பெறும் அணிக்கு ரூ.8,000-ம், இரண்டாம் இடம் பெறும் அணிக்கு ரூ.6,000-ம், மூன்றாவது இடம் பெறும் அணிக்கு ரூ. 4,000-ம் பரிசளிக்கப்படுகிறது. இந்த வினாடி- வினா நிகழ்ச்சிகளை வி.வி. ரமணன் நடத்துகிறார்.

ஆறாம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் இதில் கலந்து கொள்ளலாம். மணட அளவில் நடைபெறும் இறுதிச் சுற்றுக்கு ஆறு அணிகள் எழுத்துத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படும். மண்டல அளவில் இறுதிச் சுற்றில் வெற்றி பெறும் அணிகள், தேசிய அளவிலான இறுதிச் சுற்றுக்கு தகுதி பெறும்.

வரும் 15 ஆம் தேதி சென்னை மண்டலத்திற்கான போட்டிகள், தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. வரும் 17ம் ஆம் தேதி புதுச்சேரி பொறியியல் கல்லூரி, பிள்ளைச்சாவடி, புதுவையில் நடக்கிறது.

இதேபோல் மதுரையில் 18 ஆம் தேதியும், கோவையில் 19 ஆம் தேதியும், திருச்சியில் 20 ஆம் தேதியும் 'யங் வேர்ல்ட்' வினாடி- வினாப் போட்டி நடைபெறுகிறது.

இதில் பங்கேற்க எவ்வித கட்டணமும் இல்லை. பங்கேற்க விரும்பும் குழுக்களின் விண்ணப்பங்கள் 'இந்து' பத்திரிக்கையின் அந்தந்த மண்டல அலுவலகத்திற்கு வரும் அக்டோபர் 10 ஆம் தேதிக்குள் வந்து சேர வேண்டும்.

வெப்துனியாவைப் படிக்கவும்