போர்ட் பெலோஷிப் விண்ணப்பங்கள் வரவேற்பு!

வியாழன், 25 செப்டம்பர் 2008 (18:03 IST)
ஆராய்ச்சிப் படிப்புகள் தொடர்பான 'போர்ட் சர்வதேச ஃபெலோஷிப் கல்வித் திட்டம்- 2009'-க்கு தகுதி வாய்ந்த மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து இத்திட்டத்தின் துணை இயக்குனர் நீரா லட்சுமி ஹாந்தா லக்னோவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நாட்டில் புதிய தலைமுறையினரில் சமூகநீதித் தலைவர்களை உருவாக்க தரமான கல்வி மாணவர்களுக்குத் தேவைப்படுகிறது. உயர்கல்விக்கு வாய்ப்பில்லாத, திறமையானவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு உயர்கல்வி அளிக்கும் நோக்கத்துடன் 'போர்ட் சர்வதேச ஃபெலோஷிப் கல்வித் திட்டம்- 2009' வடிவமைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் 2009 ஆம் ஆண்டுக்கு 40 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை, அல்லது முதுகலை பட்டமும், 55 சதவீத மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும்.

பீகார், சட்டீஸ்கர், குஜராத், ஜம்மு காஷ்மீர், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், ஒரிசா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேச, உத்தரகாண்ட் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்கலாம்.

இதில் சேர விரும்புவோர் வரும் நவம்பர் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதுகுறித்த முழு விவரங்களை டபிள்யூ.டபிள்யூ.டபிள்யூ. ஐஎப்பிஎஸ்ஆ.ஒஆர்ஜி என்ற இணையதளத்தில் காணலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்