ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு புத்தகம், சிறப்புப் பயிற்சிகள் மட்டும் அல்லாமல் அனைத்து வசதிகளையும், படிப்பதற்கான சூழலையும் ஏற்படுத்திக் கொடுத்து ஏழை, எளிய மாணவர்களின் எதிர்காலங்களை பிரகாசமாக்கும் ஒரு அமைப்புத்தான் மனிதநேய அறக்கட்டளை.
webdunia photo
WD
இதனை நடத்தி வருபவர் தமிழக சட்டப் பேரவையின் உறுப்பினராக இருந்தபோது சிறப்பாக பணியாற்றி முத்திரை பதித்த சைதை சா. துரைசாமி ஆவார்.
அறக்கட்டளையின் கல்வித் திட்ட இயக்குநர் மா. வாவூசியிடம் இதுபற்றி பேசினோம்.
அவர் அளித்த விவரங்கள், "இந்த அறக்கட்டளையில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். மட்டுமல்லாமல் டி.என்.பிஎஸ்.சி. - குரூப் 1 தேர்விற்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
webdunia photo
WD
கிராமப்புற மாணவர்களுக்கு இதில் முன்னுரிமை அளிக்கப்படும். பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் இருக்கும் மாணக்கர்களை தேர்வு செய்து அவர்களது ஐ.ஏ.எஸ் லட்சியத்தை நிறைவேற்றித் தருவதுதான் இந்த அறக்கட்டளையின் நோக்கம்.
ஆண்டு தோறும் இதுபோன்ற 100 மாணாக்கர்களை தேர்வு செய்து அவர்களுக்கு அனைத்து வசதிகளையும் வழங்கி ஐ.ஏ.எஸ். தேர்வு எழுத பேருதவி செய்யும் இந்த அறக்கட்டளை எதிர்பார்ப்பது மாணாக்கர்களின் கடின உழைப்பு ஒன்றை மட்டும்தான்.
கல்வி பயில அனைத்து வசதிகளையும், சூழலையும் உருவாக்கிக் கொடுத்து படித்து உங்கள் வாழ்க்கையை உயர்த்திக் கொள்ளுங்கள் என்று வாய்ப்பளிக்கிறது இந்த அறக்கட்டளை.
அதாவது இந்திய ஆட்சிப் பணித் தேர்விற்கு பொதுவாக என்னென்னத் தடைகள் இருக்குமோ...
அவை அனைத்தையும் தகர்த்தெறிந்து ஒரு வழிகாட்டலாக இந்த அறக்கட்டளை செயல்படுகிறது.
இணைய தளங்கள் வாயிலாகவும், நேரடியாகவும் இலவசமாகப் பெறும் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களை இணைத்து அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்பியவர்கள் அனைவருக்கும் நுழைவுத் தேர்வு வைக்கப்பட்டு அதில் தேர்ச்சி அடையும் மாணவர்கள் நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்படுகிறார்கள்.
நேர்முகத் தேர்வில் வெற்றி பெறும் மாணாக்கர்களுக்கு அடிப்படைக் கல்வி, புத்தகங்கள் என அனைத்தையும் வழங்கி, சிறந்த ஆசிரியர்களை வைத்து சிறப்புப் பயிற்சியும் அளிக்கப்படுகிறது.
இந்த ஆண்டு, விண்ணப்பங்களைப் பெற்று அனுப்புவதற்கு ஜூலை 4ஆம் தேதி கடைசி நாளாகும். அதன் பிறகு பயிற்சிகள் துவங்கும். இங்கு இருக்கும் வசதிகள் போன்று நமது நாட்டின் தலைநகர் டெல்லியில் கூட இல்லை என்று சொல்லலாம்.
கடின உழைப்பு மட்டுமல்லாமல் இந்த அறக்கட்டளையில் சேர்ந்து படிக்கும் மாணவர்கள் ஒழுக்கத்திலும் சிறந்து விளங்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்விற்கு 8 மாதங்களும், டி.என்.பி.எஸ்.சி. - குரூப் 1 தேர்விற்கு மூன்று அல்லது ஒன்றரை மாதங்களும் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஒரு வேளை ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வில் தோல்வி அடைந்தாலோ அல்லது வரும் தேர்வை தவிர்த்து, அடுத்த தேர்வை எழுத விரும்பினாலோ அதுவரை அவர்கள் அறக்கட்டளையிலேயே தங்கிப் படிக்கலாம்.
பெற்றோர்கள் கூட செய்ய முடியாத காரியத்தை இந்த அறக்கட்டளை செய்கிறது. அதிக விலை கொண்ட பயிற்சி புத்தகங்களை ஒவ்வொருவருக்கும் அவரவர்க்குத் தனித்தனியாக வாங்கிக் கொடுக்கிறது.
வெறும் 10ஆம் வகுப்பு அதன்பிறகு, நேரடியாக பட்ட மேற்படிப்பு முடித்துவிட்டு இங்கு வரும் மாணவர்களும் உள்ளனர். அவர்களுக்கும் ஐ.ஏ.எஸ். கனவு இருக்கிறது. ஆனால் அதற்குத் தேவைப்படும் கல்வி அறிவு சற்றுக் குறைவாகவே இருக்கும். அவர்களால் கடின முயற்சி செய்தும் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற முடிவதில்லை. இது அவர்களது கல்வி அறிவின் குறைபாடுதான். மேலும், பாடத் திட்டத்தை அவர்களால் முழுமையாகப் படிக்கவும் இயலவில்லை. ஆங்கில அறிவுக் குறைபாடும் இதில் ஒரு முக்கியக் காரணமாகவே உள்ளது.
எனவே 10ஆம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு, கல்லூரியில் பட்டப் படிப்பு என்று கல்வியை முறையாக படித்து முடித்து வருபவர்களுக்கு ஐ.ஏ.எஸ் படிப்பு ஏற்றதாக இருக்கும்.
கடந்த ஆண்டு இந்த பயிற்சியில் சேர்ந்து பின்னர் அவர்களால் கடின உழைப்பிற்கு ஈடு கொடுக்க முடியாமல் பயிற்சியை பாதியிலேயே முடித்துக் கொண்டவர்களும் உண்டு.
மேலும், பள்ளியில் 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்புகளில் மாணவர்களை விட அதிக அளவில் தேர்ச்சி பெறும் மாணவிகள்,
இந்த ஆட்சியமைப்புப் படிப்புகளில் முன்னிலைப் பெறாததற்கு நமது பாடத் திட்டம்தான் காரணம்.
மாணவிகள் நமது பள்ளிப் பாடத் திட்டத்தை அப்படியே மனனம் செய்து அதனை தேர்வில் எழுதி அதிக விழுக்காடு மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றுவிடுகின்றனர். ஆனால் இந்திய ஆட்சிப் பணிப் பாடத் திட்டம் அதற்கு நேர்மாறானது. அதனை நன்கு புரிந்து, உணர்ந்து, அதைப் பற்றி சிந்திக்க வேண்டும். மனனம் செய்து தேர்வு எழுதும் மாணாக்கர்களால் இது இயலாமல் போகிறது.
மேலும், பட்டப்படிப்பை முடித்துவிட்டோ அல்லது பட்ட மேற்படிப்பை முடித்துவிட்டோ திடீரென ஆட்சிப் பணித் தேர்வு எழுத வருபவர்களில் பலர் அதனைப் பற்றி முழுமையாகப் புரிந்து கொள்ளாமலேயே சேர்ந்து விடுகின்றனர்.
அதனைத் தவிர்க்க தற்போது அடிப்படைப் பயிற்சி ஒன்றினை இந்த ஆண்டு முதல் துவக்க இருக்கிறோம். அதாவது கல்லூரியில் கலை மற்றும் அறிவியல் பட்டப் படிப்பு பயிலும் மாணாக்கர்கள் 2ஆம் ஆண்டில் இருந்தும், பொறியியல் படிக்கும் மாணாக்கர்கள் 3ஆம் ஆண்டில் இருந்தும் இதற்கான பயிற்சியை எடுத்துக் கொள்ளலாம்.
webdunia photo
WD
அவர்கள் பட்டம் பெறுவதற்குள் அரசமைப்பு தேர்வு பற்றிய முழு விவரங்களையும் அவர்கள் பெற்று விடுவார்கள். அதன் பிறகு அவர்களுக்கு பயிற்சி அளித்தால் அது முழுமையான பலனளிக்கும் என்று முடிவு செய்துள்ளோம். எனவே இந்த அடிப்படைப் பயிற்சி திட்டம் வரும் நவம்பர் மாதத்தில் இருந்து துவங்குகிறது.
ஆட்சிப் பணியின் மீதான லட்சியமும், கடின உழைப்புக்கு அஞ்சாத மனமும் கொண்டவர்களுக்கு மனிதநேயம் அறக்கட்டளை நிச்சயம் ஒரு பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்கித் தரும்" என்றார் நம்பிக்கையுடன்.
மனிதநேய அறக்கட்டளையின் தலைவர் சைதை சா. துரைசாமியிடம் இதுபற்றி பேசினோம்.
கேள்வி : அறக்கட்டளை துவங்கி கல்விக்கு சேவையாற்ற வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு எப்படி வந்தது?
துரைசாமி : இந்த எண்ணம் எனக்கு புதிதாக தோன்றியது அல்ல. எனக்கு முதலில் இருந்தே அந்த எண்ணம் இருந்தது.
அர்ப்பணிப்பு வாழ்க்கையே அனைத்திலும் சிறந்தது. என்னிடத்தில் எது இருக்கிறதோ அது மற்றவர்களுக்கும் தாராளமாக பயன்பட வேண்டும் என்று விரும்புபவன். பதவி இருந்தால் அது மற்றவர்களுக்கு பயன்பட வேண்டும், பணம் இருந்தால் அது மற்றவர்களுக்கு பயன்படவேண்டும். அவ்வளவுதான்.
முதலில் என்னிடம் உடல் உழைப்பு மட்டுமே இருந்தது. அதனை அளித்தேன். பிறகு பதவி வந்தது, அதனை சமூகத்தின் நலனிற்கு பயன்படுத்தினேன். இப்பொழுது செல்வம் வந்துள்ளது, உழைத்து சம்பாதித்தது, இதனை தேவைப்படுகிறவரகளுக்கு அவர்கள் தகுதிபெறும் துறைகளில் மேம்பட பயன்பட வேண்டும் என்பது இந்த அறக்கட்டளையின் நோக்கம்.
நான் எம்.எல்.ஏ.வாக இருந்த போதே இலவச ஜெராக்ஸ், டைப்பிங் செய்து கொடுத்துக் கொண்டிருந்தேன். பலருக்கும், நான் என்னவோ இப்போதுதான் இதைத் துவங்கி செய்து கொண்டிருப்பதாக கருதுகிறார்கள். என்னுடன் நெருங்கிப் பழகியவர்களுக்கு மட்டும்தான் எனது நோக்கம் புரியும். நான் பொதுவுடைமை சித்தாந்தம் என்ற நோக்கத்தில் எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறேன். நான் என்ன விரும்புகிறேனோ, எனக்கு என்ன கிடைக்க வேண்டும், என்ன வசதி வாய்ப்புகள் வேண்டும் என்று விரும்புகிறேனோ அவை எல்லாம் மற்றவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று விரும்புபவன் நான்.
இந்த நோக்கம் மட்டுமல்ல, இந்த நோக்கத்தின் அடிப்படையில் பல்வேறு பணிகளை செய்யப் போகிறோம். எதிர்காலத்தில் நிறைய செய்யப் போகிறோம். இது ஒரு துளிதான். அது என்ன என்பதை..
தற்போது சொல்லப்போவதில்லை. அது நடக்கும்போது பாருங்கள்.
யாதும் ஊரே, யாவரும் கேளிர், ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று பல சான்றோர்கள் பல்வேறு விஷயங்களை சொல்லியுள்ளனர். வள்ளுவன், புத்தன் என எத்தனையோ பேர் நல்ல விஷயங்களை சொல்லியுள்ளனர். ஆனால் அதனை படிப்பவர்கள் எல்லாம் அதனை எவ்வாறு உள்வாங்கிக் கொள்கின்றனர் என்பதில் வேறுபாடு உண்டு. பலரும் அவ்வாறு செய்வதில்லை. என்னைப் பொறுத்தவரை எந்த ஒரு நல்லக் கருத்தைப் பார்த்தாலும், படித்தாலும், கேட்டாலும் அதனை உள்வாங்கி வாழ்ந்து காட்டி வழிகாட்டு என்பதுதான் எனது தாரகமந்திரம்.
சொல்வது எளிது, செய்து காட்டுவது கடினம், சொன்னதையும், சொல்வதையும், கண்டதையும் உணர்ந்து அதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற நோக்கம் கொண்டுள்ளேன்.
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்.க்கு நீங்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்ததற்கு காரணம்?
webdunia photo
WD
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்.க்கு முக்கியத்துவம் தருவதற்கு காரணம் என்னவென்றால், எனது பள்ளி நாட்களில் எனது வகுப்பாசிரியர் ஒரு கட்டுரை எழுதச் சொன்னார். அப்போது "நான் சட்டமன்ற உறுப்பினர் ஆனால்" என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதினேன். அது மாநில அளவில் முதலிடம் பெற்று பரிசுகளை வாங்கித் தந்தது.
ஆனால் அந்த கட்டுரையைப் படித்த எனது ஆசிரியர், உனது கட்டுரை சிறப்பாக உள்ளது. அதில் எந்த குறையும் இல்லை. ஆனால் ஆட்சிப் பணி என்று ஒன்று உள்ளது. நீ அதன் மீது கவனம் செலுத்தி இந்திய ஆட்சிப் பணியில் சேர வேண்டும் என்று கூறினார். பட்டப்படிப்பு முடித்துவிட்டு ஒரு தேர்வு எழுதினால் போதும் கலெக்டர் ஆகி விடலாம் என்று அந்த காலத்தில் ஒரு பெரிய பெயர் இருந்தது.
அப்போதிருந்து அதன் மீது எனக்கு ஆர்வம் ஏற்பட்டது. ஆனால் எனது படிக்க முடியாத சூழ்நிலை அவ்வாறு ஆக முடியாமல் போனது. ஆனால் அதன் தாக்கம் எனது மனதிற்குள் ஆழமாக இருந்தது.
துவக்கத்தில் நான் பொறியியல் கல்லூரி துவக்க எண்ணினேன். ஆனால் கல்வியை வணிக மயமாக்கி விடக் கூடாது என்பதற்காக அந்த திட்டத்தை நான் கைவிட்டேன். இல்லையென்றால் எப்போதோ ஒரு பொறியியல் கல்வியைத் துவக்கியிருப்பேன். என்னிடம் வணிக நோக்கம் இல்லாததால் அதனை நான் செய்யவில்லை.
என்னிடத்தில் பொருளாதாரம் இருந்தால் நான் முதலில் கல்வியைத் தானமாக வழங்குவேன் என்று எண்ணியிருந்தேன். அதன்படி கல்விக்கு சேவையாற்றி வருகிறேன். அன்று எனது ஆசிரியர் சொன்ன அந்த ஒரு வார்த்தை இன்றும் என மனதில் ஆழமாக இருப்பதுதான் ஆட்சித்துறை பணிக்கு முன்னுரிமை அளிப்பதற்குக் காரணமாகும். அந்த சிந்தனைதான் தற்போது நிறைவேறியுள்ளது என்று சைதை துரைசாமி கூறினார்.