மாலத்தீவில் வேலை: மருத்துவர்களுக்கு அரசு அழைப்பு!
வியாழன், 3 ஏப்ரல் 2008 (10:02 IST)
மாலத்தீவு அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற மருத்துவர்களுக்கு தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பி.ஆர்.பிந்துமாதவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பொது மருத்துவர்கள், குழந்தை மருத்துவர்கள், மயக்க மருத்துவர்கள், மகளிர் - மகப்பேறு துறை மருத்துவர்கள் (ஆண் மருத்துவர்களும் செல்லலாம்.), காது - மூக்கு - தொண்டை மருத்துவர்கள் உள்ளிட்ட பணியிடங்களில் மாலத்தீவு அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற அவசரமாக மருத்துவர்கள் தேவைப்படுகின்றனர்.
இதற்கான நேர்காணல் சென்னை அடையாறு டாக்டர் முத்துலட்சுமி சாலையில் (எல்.பி. சாலை) உள்ள "ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேஷன் லிமிடெட்' நிறுவனத்தில் ஏப்ரல் 3, 4 ஆகிய இரண்டு தினங்கள் நடைபெறும். ஏப்ரல் 3ஆம் தேதி பிற்பகல் 1.30 மணிக்கும் ஏப்ரல் 4ஆம் தேதி காலை 9 மணிக்கும் நேர்காணல் நடைபெறும்.
சிறப்பு மருத்துவ சேவை மருத்துவருக்கான வயது வரம்பு 55. மற்ற மருத்துவர்களுக்கு வயது வரம்பு 45. எனினும் தமிழ்நாடு மருத்துவ சேவையின் கீழ் பணிபுரியும் சிறப்பு மருத்துவர்கள் இந்த நேர்காணலில் கலந்து கொள்ள முடியாது. அரசுப் பணியில் உள்ள பொது மருத்துவர்கள் கலந்து கொள்ளலாம்.
தேர்வு செய்யப்படும் மருத்துவர்களுக்கு படிகள் உள்பட மிக அதிக சம்பளம், தங்கும் வசதி, விமானப் பயணச் செலவு, கூடுதல் நேரம் பணியாற்றுவதற்கு சம்பளம், வருமானவரிச் சலுகை ஆகியவை கிடைக்கும். ஆர்வம் உள்ள மருத்துவர்கள் சுய விவரக் குறிப்புகள், படிப்புத் தகுதி, பணி அனுபவம், 8 புகைப்படங்களுடன் நேர்காணலுக்கு வரலாம் என்று பிந்துமாதவன் தெரிவித்துள்ளார்.