சட்டத்துறையில் அயல் அலுவலக பணி வாய்ப்பு!

Webdunia

திங்கள், 29 அக்டோபர் 2007 (19:29 IST)
அமெரிக்காவில் உள்ள வழக்கறிஞர் நிறுவனங்கள், அதன் சட்ட சம்பந்தமான பணிகளை, இந்தியாவில் கொடுத்து அயல் பணியாக (BPO) செய்துகொள்ளத் துவங்கியுள்ளன.

அமெரிக்கா உட்பட வளர்ந்த நாடுகளில் உள்ள வர்த்தக, தொழில் நிறுவனங்கள், வங்கிகள் போன்றவை, அவற்றின் அலுவலக பணிகளை இந்தியா போன்ற நாடுகளில் இணையத் தொடர்பு வழியாக கொடுத்து செய்கின்றன.

இந்தியா போன்ற நாடுகளில் படித்த திறமையான இளைஞர்கள் குறைந்த சம்பளத்தில் வேலைகளை செய்கின்றனர். அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் குறிப்பிட்ட வேலையை செய்ய வேண்டும் என்றால் 200 முதல் 300 டாலர் வரை செலவாகும். ஆனால் அதே வேலையை இந்தியாவில் செய்ய 30 டாலர்களே செலவழித்தால் போதும்.

இதனால் மேலை நாட்டு நிறுவனங்கள் இந்தியா போன்ற நாடுகளை நாடி வருகின்றன.

இது போன்ற பணிகளை செய்து கொடுக்கும் நிறுவனங்கள் அயல் அலுவலக பணி ( பிசினஸ் ஃப்ராசஸ் அவுட் சோர்சிங் - BPO) என்று அழைக்கப்படுகிறது. இப்போது இந்திய அயல் பணி நிறுவனங்கள் வங்கி, நுகர்வோர் குறை, கடன் வழங்கும் நிறுவனங்கள் உட்பட பல்வேறு துறைகளில் செய்து கொடுக்கின்றன.

இப்போது இந்த அயல் அலுவலக பணியை செய்வதற்கு சட்டம், நீதிமன்றம் ஆகிய துறைகளில் அதிகளவு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் இந்தியாவில் சட்டம் படித்த பட்டதாரிகள் அதிகளவு இருக்கின்றனர். அத்துடன் நீதிமன்றங்களில் தேவைப்படும் ஆங்கில புலமையும் இருக்கின்றது.

இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள அமெரிக்க சட்ட சேவை நிறுவனங்கள் இந்தியாவை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துள்ளன. ஏற்கனவே பரிசோதனை முயற்சியாக சில நிறுவனங்கள் சட்டம், நீதித்துறை பணிகளை இந்தியாவில் கொடுத்தன. இப்போது அதிகளவு நிறுவனங்கள், அதன் சட்டம், நீதிமன்றம் சார்ந்த பணிகளை அயல் அலுவலக பணி முறையில், இந்தியாவில் கொடுக்க துவங்கியுள்ளன. இதனால் சட்டம் படித்த பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.

இத்துறையில் சட்டம் படித்த பட்டதாரிகளுக்கு வழக்கு சம்மனை தயாரிப்பது, இதே போன்ற வழக்கில் முந்தைய தீர்ப்பு நகலை தேடி கொடுப்பது, வழக்குக்கு தேவையான துணை ஆவனங்கள், வழக்கை ஆய்வு செய்வது, சட்ட விளக்கம் உட்பட நீதித்துறைக்கு தேவையான பணிகளை செய்து கொடுக்கும் வாய்ப்பு உள்ளது.


சர்வதேச அளவில் சட்டத்துறை பணிகள் மற்ற நாடுகளில் கொடுத்து செய்யப்படுகின்றன. இது தற்போது மொத்த பணியில் மூன்று முதல் நான்கு விழுக்காடு வரை உள்ளது. இது 2010 ஆம் ஆணடில் 7 விழுக்காடாக அதிகரிக்கும். இதன் மதிப்பு 2,500 லட்சம் டாலராக இருக்கும் என்று ஒரு ஆய்வில் மதிப்பிடப்பட்டுள்ளது.

தற்போதைய நிலவரப்படி 200 அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி சட்ட நிறுவனங்கள் ( வழக்கறிஞர் அலுவலகங்கள் ) அவைகளின் பணியை வெளிநாடுகளில் அயல் அலுவலக பணியாக கொடுத்து செய்து கொள்ளும் முயற்சியில் இறங்கியுள்ளன.

தற்போது ஆபிஸ் டைகர், இன்டலிவேட், பிரிசம், கோமட் ஆகிய நிறுவனங்கள் சட்டத்துறையின் அயல் அலுவலக பணியை செய்து கொடுக்கின்றன.

இதில் சட்டம் படித்த பட்டதாரிகளுக்கு மட்டும் இல்லாமல் பொறியியல் பட்டதாரிகளுக்கும் காப்புரிமை பணிகளை செய்து கொடுக்கும் வாய்ப்பு அதிகளவு உள்ளது.

இந்திய காப்புரிமை ( பேட்டண்ட் ) ஆணையத்தில் 600 காப்புரிமை முகவர் அலுவலகங்கள் பதிவு செய்து கொண்டுள்ளன. அத்துடன் 300 அறிவுசார் சொத்துரிமையை பதிவு செய்யும் அலுவலகர்கள் இருக்கின்றனர். தற்போது இவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் அமெரிக்கா மற்றம் ஐரோப்பிய நாடுகளில் உள்ள நிறுவனங்களுக்கு காப்புரிமை பணியை செய்து கொடுக்கின்றனர்.

இந்த எண்ணிக்கை 2010 ஆம் ஆண்டில் 1,800 முதல் 2,000 ஆக அதிகரிக்க வாய்ப்புள்ளது.

அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஆஸ்ட்ரேலியா, தென்கொரியா, ஜப்பான், சீனா ஆகிய நாடுகள், தங்களின் சட்டம் சார்ந்த பணிகளை, மற்ற நாடுகளில் கொடுத்து அயல் அலுவலக பணி முறையில் செய்து கொள்கின்றன.

பொறியியல் படித்த பட்டதாரிகள் காப்புரிமை பணியில், காப்பிரிமைக்கு விண்ணப்பிக்கும் நிறுவனத்தின் கண்டுபிடிப்பு பொருளுக்கு போன்று, மற்ற நிறுவனங்கள் காப்புரிமைக்கு விண்ணப்பித்துள்ளதா என்று ஆய்வு செய்வது, காப்புரிமை விண்ணப்பம் தயாரிப்பது, விண்ணப்பத்தில் இணைக்கும் ஆவணங்களை தயாரிப்பது, தொழில்நுட்ப தகவல்கள் உட்பட பல்வேறு பணிகள் செய்து கொடுக்கும் வாய்ப்பு உள்ளது.

இது போன்ற சட்டம் மற்றும் நீதித்துறை சார்ந்த பணிகளை மற்ற வெளிநாடுகளுக்கு அயல் அலுவல் பணி முறையில் வழங்கும் நிறுவனங்களில் முன்னணி நிறுவனமான லாஸ்கிரிப் இன்கார்பரேடட் நிறுவனத்தின் தலைவரும், தலைமை செயல் அலுவலருமான குனூர் சோப்ரா கூறியதாவது :

“அமெரிக்காவில் ஒரு சட்டத்துறை சார்ந்த பணி செய்ய 200 முதல் 300 டாலர் வரை செலவாகும். அதே வேலையை இந்தியாவில் 30 டாலருக்குள் செய்து முடித்து விடலாம். இதனால் எங்களுக்கு 90 விழுக்காடு செலவு மிச்சமாகிறது.

மற்ற நாடுகளை விட இந்தியாவை விரும்பக் காரணம். ஊழியர்களின் சம்பளம் குறைவு, ஆங்கில மொழித் திறன், இங்கு சட்டத்துறை சார்ந்த படிப்புக்கும் மற்ற நாடுகளில் உள்ளவைகளுக்கும் அதிகளவு ஒற்றுமை இருப்பதே.

இப்போது இந்தியாவில் உள்ள எங்கள் அலுவலகம் குர்கானில் உளளது. இதில் 85 பேர் பணியாற்றுகின்றனர். இதை அடுத்த வருடத்திற்குள் 300 பேராக அதிகரிக்கப் போகின்றோம். நாங்கள் லூதியானா, ஜெய்ப்பூர், சண்டிகார், டேராடூன் உட்பட பல நகரங்களில் அலுவலகம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.

இப்போது இந்த துறையில் பணியில் சேருபவர்கள் குறுகிய காலத்திலேயே மற்ற நிறுவனங்களுக்கு சென்று விடுகின்றனர். இந்த போக்கை தடுத்து நிறுத்த ஊழியர்களுக்கு வருங்கால வைப்பு நிதி, நிறுவனத்தின் பங்குகளை வழங்குதல் போன்றவற்றை செய்து கொடுக்க உள்ளோம” என்று அவர் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்