தமிழக அஞ்சல் துறையில் வேலை வாய்ப்பு

Webdunia

சனி, 21 ஜூலை 2007 (12:30 IST)
தமிழக அஞ்சல் துறையில் பனிரெண்டாம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது.

தமிழ்நாடு வட்ட அஞ்சல் துறைக்கு உள்பட்ட தபால் அலுவலகங்களில் தபால் பிரிவு உதவியாளர்கள் (சார்ட்டிங் அசிஸ்டென்ட்), தபால் உதவியாளர்கள் 219 பேர் புதிதாக நியமிக்கப்பட உள்ளனர்.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம், ஈரோடு, தஞ்சாவூர், தூத்துக்குடி உள்பட 40 அஞ்சலக கோட்டங்களில் இந்த காலி இடங்கள் உள்ளன. இந்த பணிக்கு பிளஸ்-2 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தொழிற்கல்வி மாணவர்கள் விண்ணப்பிக்க முடியாது. வயது 25-க்குள் இருக்க வேண்டும். ஓ.பி.சி. வகுப்பினருக்கு 3 ஆண்டும், எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினர் எனில் 5 ஆண்டும் வயது வரம்பில் சலுகை உண்டு.

இதற்கான விண்ணப்ப படிவங்கள் அனைத்து மாவட்ட தலைமை தபால் அலுவலகங்களிலும், தாலுகா அளவில் உள்ள அனைத்து துணை தலைமை அலுவலகங்களிலும் கிடைக்கும். விண்ணப்ப கட்டணம் ரூ.25. இதில் கல்வித்தகுதி, வயது வரம்பு, காலி இடங்கள் விவரம் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் இடம்பெற்றிருக்கும்.

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வருகிற 30-ந் தேதிக்குள் அனுப்ப வேண்டும். விண்ணப்பதாரர்கள் எந்த அஞ்சல் கோட்டத்தில் உள்ள காலி இடங்களுக்கு விண்ணப்பிக்கிறார்களோ அந்த அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளருக்குத்தான் விண்ணப்பிக்க வேண்டும்.

பனிரெண்டாம் வகுப்பு இறுதித் தேர்வில் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.

பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் சுமார் 70 விழுக்காடு மதிப்பெண் பெற்றிருப்பவர்களுக்கு தேர்வில் கலந்துகொள்ள வாய்ப்பு உள்ளது. எழுத்துத்தேர்வுக்கு 60 மதிப்பெண். பனிரெண்டாம் வகுப்பில் எடுத்த மதிப்பெண் 40 விழுக்காடு எடுத்துக்கொள்ளப்படும். இந்த இரண்டின் அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்படும் என்று அஞ்சல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்