ஐ.ஐ.டி-யில் தற்கொலைகளை தடுக்க மாணவர்களுக்கு உளவியல் பயிற்சி
செவ்வாய், 4 டிசம்பர் 2012 (13:15 IST)
FILE
இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் (ஐ.ஐ.டி), தேசிய தொழில்நுட்பக் கழகங்கள் (என்.ஐ.டி), இந்திய மேலாண்மைக் கழகங்கள் (ஐ.ஐ.எம்) ஆகிய மத்திய அரசின் நிதியுதவி பெரும் முன்னணி கல்வி நிறுவனங்களில் அதிகரித்து வரும் மாணவர்களின் தற்கொலைகளை தடுக்கவும், அவர்களின் மனவலிமையை அதிகரிக்கச் செய்யவும் அனைத்துக் கல்லூரி, பல்கலைக் கழகங்களிலும் நிரந்தரமாக குறை தீர்ப்பு மையம் ஏற்படுத்தி உளவியல் நிபுணர்கள் மூலமாக மாணவர்களின் பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டும் என்று மனிதவள மேம்பாட்டுத்துறை கூறியுள்ளது.
இந்திய பல்கலைக்கழகங்கள் குறிப்பாக சென்னை ஐ.ஐ.டி, ஒரு வார கால பயிற்சி வகுப்புகளை முதலாமாண்டு மாணவர்களுக்கு அளிக்கின்றது. இதில் பெற்றோர்களுக்கும் எவ்வாறு தங்கள் பிள்ளைகளை ஊக்கப்படுத்துவது போன்ற வகுப்புகள் நடைபெறுகின்றன.
எல்லா மாணவர்களும் உடனடியாக தங்கள் குறைகளைப் பேச மாட்டார்கள். எனவே வெளிநாடுகளைப் போல தொடர்ச்சியான உளவியல் பயிற்சிகள் மூலம் இப்பிரச்சனைக்குத் தீர்வு காணலாம் என்று மும்பை ஐ.ஐ.டி பேராசிரியர் படேல் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் உதவி பெறும் நிறுவனங்களில் உள்ள 872 மாணவர்கள் உளவியல் பயிற்சி பெற்றுள்ளனர். பெரும்பாலான சிக்கல்கள் பள்ளியிலேயே ஆரம்பித்து விடுகின்றது. மதிப்பெண் குறைபாடுகள், சமூகப் புறக்கணிப்புகள், நீண்டநேர தனிவகுப்புகள் மற்றும் குடும்பம் சார்ந்த அழுத்தம் ஆகிய பிரச்சனைகள் ஒரு கல்லூரியில் சேரும் முன்பே தொடங்கிவிடுகின்றது.
கடந்த 2008 முதல் ஐ.ஐ.டியில் மட்டும் 33 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஐ.ஐ.டி மட்டுமில்லாமல் அண்ணா பல்கலைகழகம் உட்பட பல முன்னணி கல்லூரிகளிலும் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
ஐ.ஐ.டி சென்னை, ஐ.ஐ.டி கான்பூர், ஐ.ஐ.டி கரக்பூர் மற்றும் மும்பை டாடா கல்வி நிறுவனங்களில் தற்போது உளவியல் பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றது. இவை தவிர மற்ற நிறுவனங்களிலும் உளவியல் பயிற்சி மையம் அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.