"ஸ்கூலுக்கு போனாலே டீச்சர் கூட பிரச்சனையா இருக்கு" என்று புலம்பும் மாணவர்களுக்கு சத்குருவின் சில யோசனைகள்!
சமீபத்தில் ஈஷா ஹோம் ஸ்கூல் குழந்தைகளுடன் சத்குரு உரையாடியதிலிருந்து...
PR
கேள்வி: சத்குரு, என் வகுப்பு ஆசிரியருடன் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால், நான் என்ன செய்வது?
சத்குரு: உங்களுக்கு ஒரு பிரச்சனை இருந்தால், அதை நீங்கள்தான் சரி செய்ய வேண்டும். இது உங்களுக்கு ஒரு நல்ல அனுபவமாக இருக்கும். பிரச்சனைகளுடன் சந்தோஷமாக வாழக் கற்றுக்கொண்டால், பின்னர் இந்த உலகத்தில் நீங்கள் எதிர்கொள்ளும் விஷயங்களையும் சிறப்பாக சமாளித்துவிடுவீர்கள்.
ஏனென்றால் இந்த உலகத்தை ஒரு குறிப்பிட்ட கண்ணோட்டத்தில் பார்த்தால் அது மிகுந்த பிரச்சனைகள் நிரம்பியதாகத் தெரியும். அப்படியே பார்த்துக் கொண்டிருந்தால், இந்த உலகத்தில் கிட்டத்தட்ட எல்லாமே பிரச்சனைதான்.
இங்கு வெறும் கல்வி மட்டுமல்ல, இந்த உலகத்தில் நீங்கள் சிறப்பாக வாழ்வதற்கும்தான் உங்களை நாங்கள் தயார் செய்கிறோம்! எனவே பிரச்சனைகளோடு வாழவும் கற்றுக் கொள்ளுங்கள்.
ஆனால் நீங்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும், இந்த உலகத்தில் எதுவுமே பிரச்சனை இல்லை. இங்கு சூழ்நிலைகள் மட்டும்தான் இருக்கின்றன. உங்களால் சமாளிக்க முடிந்த சூழ்நிலைகளை நல்ல சூழ்நிலை என்று நினைக்கிறீர்கள்.
சமாளிக்க முடியாத சூழ்நிலைகளை பிரச்சனை என்று நினைக்கிறீர்கள். உங்கள் ஆசிரியருக்கு உங்களிடம் ஏதாவது பிரச்சனை இருந்தால், அவர்கள் அதைச் சரி செய்வார்கள். ஆனால் உங்களுக்கு ஒரு பிரச்சனை இருந்தால், அதை நீங்கள்தான் சரி செய்ய வேண்டும்.