அண்ணா பல்கலை.யின் 29-வது பட்டமளிப்பு விழா : சென்னையில் நாளை நடைபெறுகிறது!
வியாழன், 18 டிசம்பர் 2008 (16:22 IST)
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் 29-வது பட்டமளிப்பு விழா நாளை நடைபெற உள்ளதாக அப்பல்கலைக்கழக துணைவேந்தர் பி. மன்னர் ஜவகர் தெரிவித்துள்ளார். .
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் 29-வது பட்டமளிப்பு விழா நாளை மாலை 4 மணிக்கு விவேகானந்தா கலை அரங்கில் நடைபெறுகிறது என்றார்.
இவ்விழாவுக்கு ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா தலைமை தாங்கி பி.இ., பி.டெக்., எம்.இ., எம்.டெக்., பி.எச்டி. உள்பட 67,411 மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்குகிறார். 377 பேருக்கு பி.எச்டி. ஆராய்ச்சி பட்டமும், 89 பேருக்கு தங்கப்பதக்கம் வழங்கப்படுகிறது. சி.டி.எஸ். கம்பெனி துணைத் தலைவர் லட்சுமி நாராயணனுக்கு கவுரவ முனைவர் பட்டம் வழங்கப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
விழாவில் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி உள்பட பலர் கலந்து கொள்வதாக கூறினார். மேலும், அடுத்த கல்வி ஆண்டு முதல் முதுகலை பட்டபடிப்புக்கான (எம்.இ., எம்.டெக்) பாடத்திட்டம் மாற்றப்பட உள்ளது என்றும் அதற்கான பாடத்திட்டம் தயாராக உள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும், அண்ணா பல்கலைக்கழகத்தில் மார்க்குக்கு பதிலாக கிரேடு முறை அமல்படுத்தப்பட உள்ளதாகவும், எம்.பி.ஏ. படிப்பில் புதிதாக ஆஸ்பிட்டாலிட்டி மேனேஜ் மெண்ட், எம்.டெக். படிப்பில் விண்வெளி தொழில் நுட்பம், எம்.ஆர்க். படிப்பில் நவீன கட்டிடக்கலை தொழில்நுட்பம் ஆகிய 3 புதிய படிப்புகள் கொண்டுவரப்பட உள்ளதாகவும் மன்னர் ஜவகர் தெரிவித்தார்.