உலகில் வற்றாத ஒரே செல்வம் கல்வி ஒன்று மட்டுமே. ஆறறிவுள்ள மனிதனை மற்றவைகளிடம் இருந்து வேறுபடுத்தி, ஒரு முழு மனிதனாக மாற்றிக் காட்டுவது கல்வியும், அதனை கற்பிக்கும் ஆசிரியர்களும் தான்.
ஒரு நாடு செல்வச் செழிப்புடன் முன்னேற்றப் பாதையில் செல்ல வேண்டுமெனில், அங்குள்ள மக்கள் கல்வியறிவு பெற்றவர்களாக இருப்பது மிகவும் அவசியமாகிறது. அத்தகையை கல்வியை புகட்டி, நாட்டின் எதிர்காலச் சிற்பிகளை உருவாக்கும் ஆசிரியர்களின் தொண்டு மகத்தானது, போற்றத்தக்கது.
webdunia photo
FILE
அந்த வகையில் தலைசிறந்த, தன்னலமற்ற ஆசானாகத் திகழ்ந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளான செப்டம்பர் மாதம் 5-ஆம் தேதி 'ஆசிரியர் தின'மாக ஆண்டுதோறும் நாம் கொண்டாடி, மரியாதை செய்து வருகிறோம்.
இளம் பிஞ்சு மனங்களில் ஆசிரியர்கள் விதைக்கும் நல்ல சிந்தைனைகள், அவர்களை நல்லதொரு உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்கிறது. போர் முனையில் இரவும், பகலும் கண் விழித்து ராணுவ வீரர்கள் எவ்வாறு நாட்டைப் பாதுகாக்கின்றனரோ, அதேபோல் காலநேரம் கருதாது உழைத்து மாணவர்களை வைரங்களாக பட்டை தீட்டும் ஆசியரிகளின் பணியும் தேசத்தின் முன்னேற்றத்திற்கு பெரிதும் துணை நிற்கிறது.
ஒரு நாட்டின் எதிர்காலமே வகுப்பறைகளில் தீர்மானிக்கப்படுவதால், மற்ற பணிகளில் இருந்து வேறுபட்டு ஆசிரியர்ப் பணி புனிதத்துவம் பெறுகிறது. எனவே தான் நம் முன்னோர்கள் மாதா, பிதாவுக்கு அடுத்தபடியாக குருவை முன்னிலை படுத்திப் போற்றினர்.
webdunia photo
WD
நாம் எத்தகைய உயர்ந்த நிலையை எட்டினாலும், நமக்கு பாடம் கற்றுத் தந்த ஆசிரியரை இன்றுவரை நாம் நினைத்துப் பார்க்கிறோம். நமது வெற்றிக்கு பின்னால் அவர்கள் இருப்பதை நாம் மறுக்கத்தான் முடியுமா?
தன்னை உருக்கிக் கொண்டு மற்றவர்களுக்கு ஒளி தரும் மெழுகாகவும், நம்மையெல்லாம் மேலே தூக்கி விடும் ஏணியாகவும், அறியாமை என்ற கடலை கடக்க உதவும் தோணியாகவும் ஆசிரியர்கள் இருக்கிறார்கள்.
எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்! அத்தகைய வாழும் ஆசிரியத் தெய்வங்கள் செய்து வரும் அறப்பணியை நன்றியுடன் நாம் இந்நாளில் நினைவுகூர்ந்து போற்றுவது நமது கடமையாகும்!