நிலஅளவையாளர் தேர்வு: நுழைவுச்சீட்டு கிடைக்காதவர்களுக்கு மாற்று ஏற்பாடு!
வெள்ளி, 1 ஆகஸ்ட் 2008 (12:17 IST)
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்த உள்ள நிலஅளவையாளர், வரைவாளர் பணித் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு கிடைக்கப் பெறாதவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக அத்தேர்வாணைய தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி லால்வேனா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப்-4இல் அடங்கிய நிலஅளவையாளர், வரைவாளர் பணிக்கான எழுத்துத்தேர்வு வரும் 10ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) 104 மையங்களில் நடைபெற உள்ளது.
இத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் தேர்வு மைய விவரம், ஒருவேளை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருந்தால் அதற்கான காரணம் உள்ளிட்ட விவரங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.
நுழைவுச்சீட்டும், விண்ணப்ப நிராகரிப்பு விளக்கமும் தபால்மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. தேர்வுக்கு விண்ணப்பித்து 7ஆம் தேதி வரை எவ்வித தகவலும் பெறாதவர்கள் அல்லது இணையதளத்தில் பெயர் இடம்பெறாதவர்களுக்கு நுழைவுச்சீட்டு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இதன்படி, சென்னை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 8, 9ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை சென்னை அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தையும் மற்ற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட வருவாய் அதிகாரி அலுவலகத்தையும் அணுகி நுழைவுச்சீட்டைப் பெற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு மாற்று நுழைவுச்சீட்டு அல்லது தற்காலிக நுழைவுச்சீட்டைப் பெற வரும் விண்ணப்பதாரர்கள் ஒரு வெள்ளைத்தாளில் போட்டோ ஓட்டி அதில் அரசிதழ் பதிவுபெற்ற அதிகாரியிடம் சான்றொப்பம் (அட்டஸ்டேஷன்) பெற்று ஒரு கோரிக்கை கடிதத்தையும் சமர்ப்பிக்க வேண்டும்.
சரியான நேரத்தில் விண்ணப்பம் அனுப்பியதற்கான ஆதாரம் கேட்கப்பட்டால் அதை காண்பிக்க தயாராக இருக்க வேண்டும். நிராகரிக்கப்பட்ட விண்ணப்பம் குறித்து மறுபரிசீலனை செய்யவோ, தேர்வு மையம் மற்றும் முகவரி மாற்றம் குறித்த கோரிக்கையோ ஏற்கப்படாது" என்று கூறப்பட்டுள்ளது.