மனித குரலை கேட்டு பாலினம், வயது, இனத்தை கண்டுபிடிக்கும் யானைகள்
வியாழன், 13 மார்ச் 2014 (19:46 IST)
மனிதர்களின் குரலை வைத்தே அவர்கள் ஆணா, பெண்ணா, வயதானவர்களா, சிறுவர்களா என்பதையும், அந்த குரலுக்கு சொந்தமானவர்களின் இனக்குழுமத்தையும் கூட அடையாளம் காணும் திறமை யானைகளுக்கு இருப்பதாக ஆய்வாளர்கள் கண்டறிந்திருக்கிறார்கள்.
FILE
ஆப்ரிக்க காட்டு யானைகள் மத்தியில் நடத்தப்பட்ட பரிசோதனைகளின் முடிவுகள், Proceedings of the National Academy of Sciences என்கிற அறிவியல் சஞ்சிகையில் வெளியாகியுள்ளன. இந்த ஆய்வுகளை சசெக்ஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கேரன் மெக்கம்ப் மற்றும் முனைவர் கிரேமி ஷானன் ஆகிய இருவர் தலைமையேற்று நடத்தினார்கள்.
ஆப்ரிக்க காட்டுயானைகளுக்கும் அந்நாட்டில் இருக்கும் மாடுமேய்க்கும் மாசாய் இன மக்களுக்கும் இடையில் அடிக்கடி மோதல்கள் நடப்பது வழமை. மாசாய் இனமக்கள் யானைகளை வன்முறையாக அடித்து விரட்டுவார்கள் அல்லது கொல்லுவார்கள். ஆனால் அதே ஆப்ரிக்காவைச் சேர்ந்த கம்பா இன மக்கள் விவசாயிகள். இவர்களுக்கும் காட்டு யானைகளுக்கும் மோதல்கள் வந்தாலும் இந்த கம்பா இன மக்கள் பெரும்பாலும் காட்டு யானைகளை கொல்லுவதில்லை.
இந்த பின்னணியில், பரிசோதனையில் இறங்கிய சசெக்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மாசாய் மற்றும் கம்பா இனங்களைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகளின் குரல்களை தனித்தனியாக பதிவு செய்தார்கள். “அதோ பாரு, அங்க பாரு யானைகள் கூட்டம் ஒண்ணு வருது பாரு” என்று இவர்கள் சொல்லுவதை தனித்தனியாக ஒலிப்பதிவு செய்தார்கள் விஞ்ஞானிகள்.
குரலைவைத்து ஒருவரின் இனத்தை அடையாளம் கண்டன
இந்த குரல்களை பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ஒலிபெருக்கிகளை பயன்படுத்தி ஆப்ரிக்க காட்டு யானைகள் இருக்கும் இடத்தில் அவற்றின் காதில் விழும் விதமாக இவர்கள் ஒலிபரப்பினார்கள். இதில் மாசாய் இன ஆண்களின் குரல்களை கேட்டமாத்திரத்தில் இந்த காட்டு யானைகள் எல்லாம் விரைவாக தத்தம் குடும்ப குழுக்களாக ஒன்றுகூடி தம்மை தாக்கவரும் எதிரியிடம் இருந்து தங்களை தற்காத்துக்கொள்ளும் விதமான செயற்பாட்டை, சமிக்ஞைகளை வெளிப்படுத்தின.
FILE
ஆனால் கம்பா இன ஆணின் குரலை கேட்கும்போது இந்த யானைகள் அந்தமாதிரியான அவசரத்தையோ, அச்சத்தையோ தமது செயலில் வெளிப்படுத்தவில்லை.
அதைவிட முக்கியமாக இந்த மாசாய் ஆணின் குரலை விசேட ஒலிப்பதிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மாசாய் இனப்பெண்ணின் குரலைப்போல மாற்றி ஒலிபரப்பினார்கள். ஆனால் அப்போதும் கூட இந்த யானைகள் அது மாசாய் இன ஆணின் குரல் என்று அடையாளம் கண்டுகொண்டதுடன், அதிகபட்ச அச்சத்தை வெளிக்காட்டின.
இதன் மூலம், யானைகளின் காது கேள் திறன் என்பது மனிதர்களின் காதுகேள் திறனை விட முற்றிலும் மாறுபட்டிருப்பதாகவும், யானைகள் மனிதர்களின் குரலை புரிந்துகொள்ளும் விதமே மனிதர்களிடமிருந்து வேறுபட்டதாக இருக்கிறது என்றும் கூறுகிறார் முனைவர் மொக்கொம்ப்.
அதுமட்டுமல்லாமல், யானைகளின் இந்த நுணுக்கமான கேள் திறன் அடிப்படையில் அவை மிக விரைவாக முடிவெடுப்பதை பார்க்கும்போது, யானைகள் தமது வாழும் சூழலுக்கு ஏற்ப தொடர்ந்து தம்மை தகவமைத்துக் கொள்வதில் மிகச்சிறப்பாக இருப்பதையும் இந்த பரிசோதனை முடிவுகள் உணர்த்துவதாகவும் இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள் கூறியிருக்கிறார்கள்.
காரணம் யானைகளின் பார்வையில், அவை சந்திக்கும் பன்முகத்திறன் கொண்ட வேட்டையாடிக்கொல்லும் விலங்கு மனிதன் என்னும்போது அந்த திறமை வாய்ந்த வேட்டைக்காரனிடமிருந்து தங்களை தற்காத்துக்கொள்ள யானைகள் அதிகபட்ச விழிப்புடன் இருப்பதையே அவற்றின் இந்த சிறப்புமிக்க பிரத்யேக கேள் திறன் காட்டுவதாக தெரிவிக்கிறார் பேராசியர் மெக்கொம்ப்.
இது போன்ற ஆய்வின் முடிவுகள் யானைகளை மேலதிகமாக புரிந்துகொள்ள உதவும் என்பதையும் தாண்டி, யானைகளை பாதுகாப்பதற்கும் உதவும் என்கிறார் அவர்.