குஜராத்தில் இருந்து இலங்கை சென்ற சரக்கு கப்பலில் தீ விபத்து.. விரைந்தது கடலோர காவல்படை..!

Mahendran

சனி, 20 ஜூலை 2024 (14:35 IST)
குஜராத்தில் இருந்து இலங்கைக்கு சென்ற சரக்கு கப்பலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து இந்திய கடலோர காவல்படை விபத்து நடந்த இடத்திற்கு விரைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் உள்ள அதானி குழுமத்தின் முத்ரா துறைமுகத்திலிருந்து நேற்று இலங்கை தலைநகர் கொழும்புவுக்கு சரக்கு கப்பல் ஒன்று புறப்பட்டது. இந்த கப்பல் கோவாவிற்கு தென்மேற்கில் 102 நாட்டிகல் மைல் தொலைவில் சென்று கொண்டிருந்தபோது திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.

இந்த தீ விபத்து குறித்து உடனே கப்பலில் இருந்தவர்கள் கடலோர காவல் படையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்தவுடன் மும்பை பிரிவு கடலோர காவல் பிரிவினர் சரக்கு கப்பல் இருக்கும் இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

பல மணி நேரம் போராடிய பிறகு முழுவதும் அணைக்கப்பட்டதாகவும் சரக்கு கப்பலில் இருந்தவர்கள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. மேலும் இந்த தீயை அணைப்பதற்காக கடலோர காவல் படைக்கு சொந்தமான விமானம் பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் சரக்கு கப்பலில் தீ விபத்து ஏற்பட என்ன காரணம் என்று குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்