அரசு ஊழியர்களுக்கு சம்பளம் ரொக்கமாக கொடுக்க முடியாது - சக்திகாந்த தாஸ் அதிரடி

புதன், 23 நவம்பர் 2016 (12:02 IST)
அரசு ஊழியர்களுக்கு நவம்பர் மாத சம்பளத்தை ரொக்கமாக கொடுக்க முடியாது என பொருளாதார விவாகார துறை செயலாளர் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார்.


 

 
கருப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நோக்கத்தில், பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்றும், அதற்கு பதில் புதிய நோட்டுகளை வங்கிகளுக்கு சென்று மக்கள் மாற்றிக் கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி கடந்த 8ம் தேதி இரவு அறிவித்தார்.   
 
இந்த அறிவிப்பு, ஏழை மற்றும் நடுத்தர மக்களை அதிகம் பாதித்துள்ளதாக பலரும் குற்றம் சாட்டியுள்ளனர். ஏ.டி.எம்-ல் பணம் எடுக்கவும், பழைய நோட்டுகளை மாற்றவும் பொதுமக்கள் வங்கி மற்றும் ஏ.டி.எம் மையங்களில் காத்துக் கிடக்கின்றனர்.   
 
ஆனால், பெரும்பாலான ஏ.டி.எம்-களில் பணம் இல்லை. அப்படியே ஒரு சில ஏ.டி.எம் மையங்களில் பணம் இருந்தாலும், அங்கு மக்கள் கூட்டம் வரிசை கட்டி நிற்பதால், பணம் எடுப்பது பெரும்பாடாக இருக்கிறது. எனவே தங்களின் அன்றாட செலவுகளுக்கும், அத்தியாவசிய தேவைகளுக்கும் பணம் இல்லாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில், ஏ.டி.எம்-ல் பணம் எடுப்பது சிரமமாக இருப்பதால், அரசு ஊழியர்கள் தங்களில் நவம்பர் மாத சம்பளத்தை, மின்னணு பரிவர்த்தனை மூலம் கொடுக்காமல் ரொக்கமாக கொடுக்க வேண்டும் என வற்புறுத்தினர்.
 
ஆனால், அவர்களின் கோரிக்கையை  சக்தி காந்த தாஸ் நிராகரித்து விட்டார். எப்போதும் போல், மின்னணு முறையில்தான் பணவர்த்தனை மேற்கொள்ளப்படும். ரொக்கமாக கொடுக்க முடியாது என மறுத்து விட்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்