2020ம் ஆண்டு சிறப்பான ஆண்டாக இருக்கும் என்றே பலரும் விரும்பினார்கள். ஆனால் ஆண்டு தொடக்கத்திலேயே அனைவரையும் வீட்டுக்குள் பதுங்க செய்தது கொரோனா. கடந்த மார்ச் முதலாக இந்தியாவில் இதன் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில் கடந்த மூன்று மாதங்களாக கொரோனாதான் பெரும் அழிவாக பார்க்கப்பட்டும், பேசப்பட்டும் வந்தது. தற்போது இந்த ஆண்டின் அபாயங்களின் பட்டியலில் இணைந்திருக்கிறது அம்பன்.
கடந்த வாரம் அந்தமான் தீவு பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு நிலையாக உருவாகி, இரண்டே நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும்., அதற்கடுத்த நாளே புயலாகவும் மாறியுள்ளது அம்பன். இந்தியாவில் பெரும்பாதிப்புகளை ஏற்படுத்திய புயல்களின் அளவுக்கு சூப்பர் புயல் என்னும் மிக அபாயமான கட்டத்தை எட்டியுள்ள அம்பன் மேற்கு வங்க பகுதியில் கரை கடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது அம்பன் சூப்பர் புயலாக மாறியுள்ளதால் மிகப்பெரும் சூறாவளி காற்று வீசும் எனவும், அதனால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. புயலின் அதி தீவிர நிலையினை கருத்தில் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பேரிடர் மீட்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை குழு இன்று கூடுகிறது.
இவ்வளவு முன்னெச்சரிக்கையும், பயமும் கொள்ளும் அளவுக்கு அம்பன் புயல் தீவிரமானதா என்றால் நிச்சயமாக தீவிரமானதுதான். இதனால் தமிழகத்திற்கு ஆபத்து இல்லை என்றாலும், வங்க தேச பகுதியருகே கரை கடக்கும் அம்பனால் தமிழகத்தின் மன்னார் வளைகுடா பகுதியில் 50 முதல் 65 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தற்போது அம்பன் நகரும் நிலையினை பொறுத்து ஒடிசா, மேற்கு வங்கம், சிக்கிம், அசாம் மற்றும் மேகாலயா ஆகிய இந்திய மாநிலங்களிலும், அண்டை நாடான வங்க தேசத்திலும் கனமழையும், சூறை காற்றும் வீசும். புயல் கரையை கடக்கும் பகுதியில் நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடர்களும் ஏற்பட வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. கடந்த ஆண்டு பானி புயலின் தாக்கத்தால் ஒடிசாவில் பெரும் பொருட் சேதங்களும், உயிர் சேதங்களும் ஏற்பட்டன. இந்நிலையில் தற்போது கொரோனாவின் பாதிப்புகளிலிருந்தே பொருளாதார ரீதியாக மக்கள் மீளாத சூழலில், அம்பன் ஐந்து மாநில மக்களிடையேயும் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.