கொரோனாவை சமாளிக்க மக்களுக்கு திட்டங்கள் – நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
வியாழன், 26 மார்ச் 2020 (14:33 IST)
கொரோனா பாதிப்பினால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் குறித்த திட்டங்களை அறிவித்துள்ளார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
அதன்படி, கொரோனா தடுப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ ரூ.1.70 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்களுக்கு ரூ.50 லட்சத்திற்கு மருத்துவ காப்பீடு
விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் ரூ.6000-லிருந்து ரூ.2 ஆயிரம் முன்கூட்டியே வழங்கப்படும்.
உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் பயனாளர்களுக்கு 3 மாதங்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் வழங்கப்படும்.
ஜன்தன் யோஜனா திட்டத்தின் கீழ் வங்கி கணக்கி தொடங்கிய பெண்களுக்கு மாதம் தோறும் தலா ரூ.500 என 3 மாதங்களுக்கு வழங்கப்படும்.
100 நாள் வேலைத்திட்டத்தில் பணி புரிபவர்களுக்கு கூடுதலாக ரூ.200 வழங்கப்படும்.
பெண்கள் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்படும் கடன் தொகை ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்படுகிறது.
3 மாத காலத்திற்கு 80 கோடி மக்களுக்கு 5 கிலோ அரிசி, 5 கிலோ கோதுமை மற்றும் ஒரு கிலோ பருப்பு ஆகியவை இலவசமாக வழங்கப்படும்.
இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.