இன்று அங்கு முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த முழு கடை அடைப்பிற்கு கன்னட சலுவளிக் கட்சி, கன்னட ரக்ஷன வேதிகா உள்ளிட்ட கர்நாடகத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட அமைப்புக்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. மேலும், அம்மாநில அரசும், அரசியல் கட்சிகளும் மறைமுக ஆதரவு தெரிவித்துள்ளன.
இதனால், இன்று கர்நாடக மாநிலத்தில் பேருந்துகள், கல்வி நிலையங்கள், பெட்ரோல் பங்குகள், உணவகங்கள், திரையரங்குகள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் மாநில அரசு அலுவலங்கள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளது. விமான நிலையங்கள் இயங்கினாலும், டாக்சிகள் இயக்கப்படாது என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாண்டியா நகரில்தான் போராட்டம் உச்சத்தை எட்டியுள்ளது. அங்கு கஸ்தூரி ஜனபர வேதேகே என்ற அமைப்பினர் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடத்தினர். கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யா மற்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆகியோருக்கு எதிராக அவர்கள் கோஷமிட்டனர்.
அப்போது, ஒருவர் தீடீரென தனது கையை பிளேடால் அறுத்துக் கொண்டார். இதனால் ரத்தம் கொட்டியது. ரத்தம் வேண்டுமானாலும் கொடுப்போம். ஆனால் தண்ணீர் தரமாட்டோம் என்று அவர்கள் கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.