கடந்த 2017 ஆம் ஆண்டு, உத்தர பிரதேசத்தின் உன்னாவ் பகுதியை சேர்ந்த 17 வயது பெண் ஒருவர், வேலை கேட்டு சென்றபோது, பாஜக எம்.எல்.ஏ குல்தீப் செங்கார் தன்னை வன்கொடுமை செய்ததாக போலீஸில் புகார் அளித்தார். குல்தீப் சிங்கிற்கு ஆதரவாக இருந்த எம்.எல்.ஏக்கள் அப்பெண்ணின் வீட்டிற்கு சென்ற புகாரை வாபஸ் வாங்குமாறு மிரட்டினர்.
இது தொடர்பான வழக்கை விசாரித்த சிபிஐ, குல்தீப் செங்கார் உள்ளிட்ட 10 பேர் மீது கொலை வழக்கும், 20 பேர் மீது கொலை முயற்சி வழக்குகளும் பதிவி செய்தனர்.
இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண், சுப்ரீம் கோர்ட் நீதிபதிக்கு கடந்த ஆகஸ்து 12 ஆம் தேதி, ”எங்கள் குடும்பத்தை கொன்று விடுவதாக எம்.எல்.ஏ. மிரட்டி வருகிறார்” என கடிதம் எழுதினார். பின்பு இவரது வழக்கு விசாரணை டெல்லி நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இதனிடையே குல்தீப்பை பாஜக தனது கட்சியில் இருந்து நீக்கியது.
இதன் பிறகு உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் குல்தீப் செங்காரை குற்றவாளி என அறிவித்தது டெல்லி நீதிமன்றம். இந்நிலையில் உன்னாவ் பாலியல் வழக்கில் குல்தீப் செங்காருக்கு எஞ்சிய ஆயுள் காலம் முழுவதையும் சிறையில் கழிக்க வேண்டும் ஆயுள் தண்டனை விதித்து டெல்லி தீஸ் ஹசாரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது மேலும் குல்தீப் செங்காருக்கு 25 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அந்த அபராத தொகையில் ரூ.10 லட்சத்தை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.