நடிகையால் கேரளா முதலமைச்சர் அப்செட்

சனி, 26 நவம்பர் 2016 (12:28 IST)
கொச்சி மாநகர போலீஸ் இலாகா சார்பில் பெண்களுக்கான பாதுகாப்பு மையம் மற்றும் பெண் அதிகாரிகளுக்கான அலுவலக கட்டிட திறப்பு விழாவில் நடிகையை வைத்து குத்துவிளக்கேற்றியதால் விழாவை பாதியில் புறக்கணித்து பினராய் விஜயன் வெளியேறினார்.


 
 
கொச்சி மாநகர போலீஸ் இலாகா சார்பில் பெண்களுக்கான பாதுகாப்பு மையம் மற்றும் பெண் அதிகாரிகளுக்கான அலுவலக கட்டிட திறப்பு விழா நேற்று கொச்சியில் நடந்தது.
இந்த விழாவில் முதலமைச்சர் பினராய் விஜயன் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி புதிய கட்டிடத்தை திறந்து வைப்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அழைப்பிதழிலும் அவரது பெயரே அச்சிடப்பட்டிருந்தது.
 
அதன்படி, நேற்று விழா தொடங்கியதும் முதலமைச்சர் பினராய் விஜயன் நிகழ்ச்சிக்கு சென்றார். போலீஸ் கமி‌ஷனர் தினேஷ் அவரை வரவேற்று மேடையில் அமர வைத்தார்.
 
நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் குத்து விளக்கேற்ற முதலமைச்சர் பினராய் விஜயனை அழைப்பதற்கு பதில், நடிகை ஷீலா குத்து விளக்கேற்றுவார் என்றார். இதைகேட்டதும் பினராய் விஜயனின் முகம் மாறியது
 
அடுத்து கட்டிட திறப்பு விழா என்று கூறிய தொகுப்பாளர், புதிய கட்டிடத்தை பெண் ஏ.டி.ஜி.பி. சந்தியா திறந்து வைப்பார் என்றார்.இதனால் கடுப்பான முதலமைச்சர் பினராய்விஜயன் மேடையில் இருந்து எழுந்தார். உடனே கமி‌ஷனர் தினேஷ் அருகில் சென்று அவரை சமரசம் செய்தார்.
 
பெண்களுக்கான நிகழ்ச்சி என்பதால் பெண்களை வைத்து குத்து விளக்கு ஏற்றல் மற்றும் கட்டிட திறப்பை நடத்தியதாக கூறினார். இதைக்கேட்டு சமரசம் அடையாத முதலமைச்சர் நிகழ்ச்சியை புறக்கணித்து பாதியில் வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

 

வெப்துனியாவைப் படிக்கவும்