வருமான வரித்துறை அலுவலகத்தில் கல்கி பகவான் ஆஜர்

புதன், 6 நவம்பர் 2019 (20:01 IST)
ஆந்திராவை தலைமையிடமாகக் கொண்டு சென்னை உள்பட பல முக்கிய நகரங்களில் கிளைகள் அமைக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்த ஆசிரமம் கல்கி பகவான் ஆசிரமம். இந்த ஆசிரமத்தில் தினமும் ஆயிரக்கணக்கானோர் வருகை தந்து கல்கி பகவானிடம் ஆசீர்வாதம் பெற்றுச் செல்வார்கள். இதற்காக ஆயிரக்கணக்கிலும் லட்சக்கணக்கிலும் கட்டணம் வசூலிக்கப் பட்டது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் கல்கி பகவான் ஆசிரமங்களில் அதிக அளவு வரி ஏய்ப்பு செய்யப்படுவதாக வந்த தகவலை அடுத்து வருமான வரித்துறையினர் கடந்த மாதம் அதிரடியாக சோதனை செய்தனர். தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய நான்கு மாநிலங்களில் உள்ள கல்கி பகவான் ஆசிரமங்களில் ஒரே நேரத்தில் வருமான வரி அதிகாரிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் சோதனை செய்தனர்
 
இந்த சோதனையில் ரூபாய் 43 கோடி ரொக்கம், 18 கோடி மதிப்புள்ள அமெரிக்க டாலர் மற்றும் 5 கோடி மதிப்புள்ள வைரம் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டது. அது மட்டுமின்றி கணக்கில் வராத 500 கோடி ரூபாய் ரொக்கம் இருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டது. இதனையடுத்து ஆசிரம நிர்வாகிகளிடம் வருமானவரித் துறையினர் விசாரணை நடத்தினார். கல்கி பகவானையும் நேரில் வரவழைத்து விசாரணை செய்யவும் வருமானவரித் துறையினர் முடிவு செய்தனர்
 
இந்த நிலையில் கல்கி பகவான் தனது மனைவியுடன் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று விட்டதாக ஒரு தகவல் வெளியானது. ஆனால் அந்த தகவல் பொய் என்றும் தாங்கள் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லவில்லை என்றும் இந்தியாவில் தான் இருக்கிறோம் என்றும் கல்கி பகவான் வீடியோ ஒன்றை வெளியிட்டார்
 
இந்த நிலையில் வரி ஏய்ப்பு புகாரில் சிக்கிய கல்கி பகவான் இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் நடத்தப்படும் விசாரணையில் பல முக்கிய தகவல்கள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்