ஆளுநர் மாளிகை வளாகத்தில் நடைபெற்ற பொங்கல் நிகழ்ச்சியில் துணை நிலை ஆளுநர் தமிழிசை, புது பானையில் பால் மற்றும் அரிசி இட்டு பொங்கல் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பொங்கல் விழாவை ஒட்டி ஆளுநர் மாளிகை வளாகமே தோரணங்கள் மற்றும் கரும்புகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இதில் கலந்துகொண்ட ஏராளமான பெண்கள் புது பானையில் பொங்கல் வைத்து கொண்டாடினார்கள்.
தொடர்ந்து கிராமிய கலைஞர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மானாட்டம், மயிலாட்டம், தப்பாட்டம் கரகாட்டம், பரதநாட்டியம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த துணைநிலை ஆளுநர் தமிழிசை, அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் நடத்தும் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் அதில் கிராமிய கலைகள் இடம் பெற்றால் அது கலைஞர்களை ஊக்கப்படுத்துவதாக இருக்கும் என்றார்.
திருமணங்களில் கூட கிராமிய கலைஞர்களின் நிகழ்ச்சியில் நடத்தலாம் என்று யோசனை தெரிவித்த அவர், புதுச்சேரி எல்லா வகையிலும் வளர்ச்சி அடைந்து வருகிறது, 14 ஆண்டு காலமாக இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தற்போது முழு நேர பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றார்.
டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் உலகளவில் இந்திய முதலிடத்தில் உள்ளது என்று குறிப்பிட்ட தமிழிசை, அமைச்சர் உதயநிதி துணை முதல்வராக போகிறாரே என்ற கேள்விக்கு பதிலளிக்காமல் இரு கைகளையும் கூப்பி கும்பிடு போட்டு விட்டு புறப்பட்டு சென்றார். ராஜ் நிவாஸில் நடைபெற்ற பொங்கல் நிகழ்ச்சியில் முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.