27 வருஷம் முன்பு வீட்டை விட்டு ஓடிய கணவன்; அகோரியாக கண்டுபிடித்த மனைவி! - கும்பமேளாவில் சுவாரஸ்யம்!

Prasanth Karthick

சனி, 1 பிப்ரவரி 2025 (15:05 IST)

27 ஆண்டுகள் முன்னதாக வீட்டை விட்டு போன கணவரை, மனைவி கும்பமேளாவில் கண்டுபிடித்த சம்பவம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் பிலி பகுதியை சேர்ந்தவர் கங்காசாகர் யாதவ். இவருக்கு தன்வாதேவி என்ற பெண்ணுடன் திருமணமாகி, விமலேஷ், கமலேஷ் என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 1998ம் ஆண்டில் கங்காசாகர் வீட்டிலிருந்து வெளியேறினார். அதற்கு பிறகும் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

 

இந்நிலையில் தற்போது பிரயாக்ராஜில் நடைபெறும் கும்பமேளாவில் கலந்து கொள்ள சென்ற ஒருவர் அங்கு ஒரு அகோரியை பார்த்துள்ளார். அது பல வருடங்கள் முன்பு காணாமல் போன தனது உறவினர் கங்காசாகர் போலவே இருந்ததால் அவரை புகைப்படமெடுத்து அவரது குடும்பத்தினருக்கு அனுப்பியுள்ளார். அது அவர்தானா என்பதை உறுதிப்படுத்த அவரது குடும்பத்தினரும் அங்கு வந்த நிலையில், அது அவர்தான் என்பதை அவரது மனைவி தன்வா தேவி உறுதியாக சொல்லியுள்ளார்.

 

அவர்கள் கங்காசாகரை வீட்டுக்கு வருமாறு அழைத்தபோது அவர் மறுத்துள்ளதுடன், அவர்களை யார் என்றே தெரியாது எனவும் கூறியுள்ளார். ஆனால் அவரது தழும்புகள் உட்பட அனைத்தும் அப்படியே காணாமல் போன கங்காசாகரை ஒத்திருப்பதை அந்த குடும்பத்தினர் குறிப்பிட்டு அகோரியாக திரிபவர் கங்காசாகர்தான் என சூடம் அடிக்காத குறையாக சத்தியம் செய்கின்றனர்.

 

ஆனால் அவர் தற்போது பாபா ராஜ்குமார் அகோரி என தன்னை சொல்லிக் கொள்கிறார். இதுகுறித்து அவரது குடும்பத்தினர் போலீஸில் புகார் அளித்துள்ளனர். கும்பமேளா முடிந்த பின் அவரை அழைத்துச் சென்று மரபணு சோதனை நடத்தவும் அந்த குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்