இப்போது சிறப்பு விளக்குப் பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை கடந்த மாதம் 16-ஆம் தேதி முதல் திறக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு 144 தடை உத்தரவும் கூடுதல் போலீஸ் பாதுகாப்பும் அளிக்கப்பட்டது. மகர விளக்கு சீசனுக்காக நடை திறக்கப்பட்ட நாட்களில் இருந்து போலீஸார் பக்தர்களுக்கு கடும் கெடுபிடிகளை விதித்து வருகின்றனர்.
இதனால் பக்தர்கள் சார்பில் சபரிமலையில் பக்தர்களுக்கு போலீஸார் விதித்துள்ள தேவையில்லாத கெடுபிடிகள் மற்றும் 144 தடை உத்தரவு ஆகியவற்றை நீக்கக்கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் பொது நலன் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் போலீஸாரின் கெடுபிடிகள் மற்றும் அங்கு நிலவும் சூழல் ஆகியவை குறித்து நேரில் பார்வையிட்டு அறிக்கை தாக்கல் செய்ய முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.ராமன், ஸ்ரீஜெகன் மற்றும் மூத்த ஐபிஎஸ் அதிகாரி ஏ.ஹேமச்சந்திரன் ஆகியோர் தலைமையில் ஒரு குழுவை உயர் நீதிமன்றம் அமைத்தது.
சம்மந்தப்பட்ட இடங்களில் ஆய்வு செய்த அக்குழு ’சபரிமலை, நிலக்கல், சன்னிதானம், வாவர்நடை ஆகிய இடங்களில் போலீஸார் அமைத்துள்ள இரும்புத் தடுப்புகளை நீக்க வேண்டும். இரவு 11 மணிக்கு மேல் சரங்குத்தி வழியாகச் சன்னிதானம் வரை செல்ல பக்தர்களுக்கு எந்தவிதமான கட்டுப்பாடுகளையும் விதிக்கக் கூடாது.’ என அறிக்கைத் தாக்கல் செய்துள்ளது.