ஜிஎஸ்டி வரி அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி பாராளுமன்றத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி, நிதியமைச்சர் அருண் ஜெட்லி உள்ளிட்ட அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்றத்தில் கூடினர். இந்த கூட்டம் தேசிய கீதம் இசைத்து தொடங்கி வைக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பிரதம மோடி பேசியதாவது: நாட்டை திறன்பட அமைக்க நாம் இங்கே அமர்ந்து இருக்கிறோம். இந்த மத்திய அவையில் தான் நாம் நம்முடைய பெரிய தலைவர்களை அலங்கரித்துள்ளோம். இது மிகவும் ராசியான இடம். இங்கே நாம் நாட்டின் மிகப்பெரிய பொருளாதார மாற்றத்திற்கு கூடி இருக்கிறோம். நமது பயணத்திற்கு இந்த இடத்தை விட சிறந்த இடம் வேறு எங்கும் இருக்க முடியாது. இந்த இரவில் நாட்டிற்கு புதிய அத்தியாயத்தை துவக்க இருக்கிறோம்.
நாட்டின் சிறந்த திறமைசாலிகள் ஜிஎஸ்டியை அமல்படுத்த உழைத்துள்ளனர். அவர்களது உழைப்புதான் நாம் இங்கே அதை அமல்படுத்த கூடியுள்ளோம். கூட்டாண்மை தத்துவத்திற்கு இந்த ஜிஎஸ்டி மிகவும் சிறந்த உதாரணம். ஜிஎஸ்டி வெற்றி என்பது ஒரு அரசால் மட்டும் செய்யப்பட்டது அல்ல. அனைவரின் ஒத்துழைப்பால் அடைந்துள்ள சாதனை. கங்காநகரில் இருந்து இட்டாநகர், லேவில் இருந்து லட்சத்தீவு வரை ஒரே வரிதான். சுதந்திரத்திற்குப் பின்னர் நாட்டை இணைக்க எவ்வாறு சர்தார் பட்டேல் உழைத்தாரோ,அதேபோல் இந்து ஜிஎஸ்டி நாட்டை ஒருங்கிணைக்கும்.
நமது நாட்டின் வரி விதிப்பு வெளிநாட்டினருக்கு குழப்பத்தை ஏற்படுத்தி வந்தது. அது தற்போது தீர்ந்துள்ளது. நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆகியும், இன்னும் பல விஷயங்கள் ஏழைகளை சென்று அடையவில்லை. ஜிஎஸ்டி மூலம் அவற்றை நாம் அடையலாம்.